- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
மனிதர்களாகிய நாம் பூமியை பல காலமாக மாசுபடுத்திக் கொண்டு இருக்கின்றோம். இப்போது நாம் மாசுபடுத்தும் புதிய களமாக விண்வெளி மாறி வருகிறது. உண்மையில் விண்வெளியை நாம் புதிதாக மாசுபடுத்தவில்லை. பனிப்போர் காலத்தில் கடலுக்கு அடியில் தகவல் தொடர்பிற்காக அமெரிக்கா போட்டு வைத்த தகவல் தொடர்பு கம்பிகளை (cables) ரஷ்யா சிதைத்து,வெளி உலக தொடர்பை துண்டித்துவிடுமோ என்று அமெரிக்கா பயந்தது. அத்தகைய சிக்கலை தவிர்பதற்காக விண்வெளியில் தகவல் தொடர்பு வெளி ஒன்றை உருவாக்க திட்டமிட்டது அமெரிக்கா. அதன் படி 1961 மற்றும் 1963 ஆண்டுகளில் மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகமும் (MIT) அமெரிக்க ராணுவமும் சேர்ந்து 48 கோடி செம்பு ஊசிகளை விண்வெளிக்கு செலுத்தினார்கள். அந்த செம்பு ஊசிகள் மூலம் ரேடியோ தகவல் தொடர்பை பயன்படுத்த திட்டமிட்டார்கள். Project Needles எனப்பட்ட அந்த திட்டத்தின் மூலம் தான் மனிதர்கள் விண்வெளியை மாசுபடுத்த தொடங்கினார்கள். மற்ற மாசுபாடுகளை கட்டுப்படுத்துவதோடு இப்போது விண்வெளி குப்பைகள் என்னும் புதிய மாசுபாட்டையும் நாம் கட்டுப்படுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
![]() |
(நாசா கணினி மூலம் உருவாக்கிய 'விண்வெளி குப்பைகள்' படம் - விக்கிப்பீடியா) |
விண்வெளியில் ஒரு மில்லி மீட்டரை விட பெரிய 17 கோடி உடைந்த பொருட்களும்,10 செண்டி மீட்டரை விட பெரிய 29,000 பொருட்களும் விண்வெளியில் இருப்பதாக ஐரோப்பிய விண்வெளி கழகம் (ESA) கூறுகிறது. வேலை செய்து கொண்டிருக்கும் மற்றும் வேலை செய்யாத செயற்கைக்கோள்கள், ராக்கெட்டுகள் மற்றும் விண்கலங்களில் இருந்து உடைந்த பாகங்கள் தான் இத்தகைய விண்வெளி குப்பைகளை உருவாக்குகின்றன. 2007ல் சீனா தனது FY-1C செயற்கைக்கோளை செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணையை வைத்து விண்வெளியிலேயே வெடிக்கச் செய்தது. 2009ல் ரஷ்யாவின் வேலை செய்யாத செயற்கைக்கோளான Kosmos-2251அமெரிக்காவின் தகவல் தொடர்பு செயற்கைக்கோளான Iridium 33யோடு மோதியது. இந்த நிகழ்ச்சியினால் இரண்டாயிரத்திற்கும் மேலான பெரிய உடைந்த பொருட்கள் விண்வெளியில் உருவாகின. இந்த இரண்டு நிகழ்ச்சிகள் மட்டும் ஆயிரக்கணக்கான விண்வெளி குப்பைகளை உருவாக்கின. விண்வெளி குப்பைகள் சுற்றும் பாதைகளில் இருந்து செயற்கைக்கோள்கள் விலகி செல்ல வேண்டும். இல்லை என்றால், உடைந்த பாகங்கள் செயற்கைக்கோள்களை கடுமையாக தாக்கி சேதப்படுத்திவிடும். செயற்கைக்கோள்கள் விண்வெளியில் நகர்வதற்கு எரிபொருள் தேவைப்படும். விண்வெளி மாசுபாடு அதிகரித்துக் கொண்டிருந்தால், விண்வெளியில் நகர்வதற்காகவே செயற்கைக்கோள் அதிகப்படியான எரிபொருளை கொண்டுச் செல்ல நேரிடும்.
முன்பு எப்பொதும் இல்லாத அளவிற்கு அதிகமான செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்புகின்றோம். இப்போது பல விண்வெளி கழகங்கள் சிறிய செயற்கைக்கோள்களையும் விண்வெளிக்கு அனுப்புகிறார்கள். SpaceX, Boeing போன்ற தனியார் நிறுவனங்களும் விண்வெளி பந்தயத்தில் நுழைந்திருக்கிறார்கள். இதனால் விண்வெளி போக்குவரத்து மேலும் அதிகரிக்கும். செயற்கைக்கோள்கள் மற்றும் விண்வெளி குப்பைகளை தீவிரமாக கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டும். இல்லை என்றால், விண்வெளி குப்பைகள் செயற்கைக்கோள்கள் மற்றும் விண்கலங்களை விண்வெளிக்கு அனுப்புவதில் பெரும் சிக்கலை ஏற்படுத்திவிடும். அமெரிக்க ராணுவமும், விமான படையும் விண்வெளி குப்பைகளை ரேடார்கள் மூலம் கண்காணித்து வருகின்றன. விண்வெளி குப்பைகள் மூலம் எதாவது மோதல்கள் ஏற்பட வாய்ப்பு இருந்தால்,இவர்கள் முன்கூட்டியே எச்சரித்துவிடுவார்கள். செயல்படாத செயற்கைக்கோள்களை பூமியின் வளிமண்டலத்துக்கு கொண்டு வந்து எரித்துவிடுவதைப் பற்றியும் விண்வெளி கழகங்கள் திட்டமிட்டு இருக்கிறார்கள்.
Comments
Post a Comment