- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
செவ்வாய் கோள் மற்றும் நமது நிலாவில் வாழ்வதற்கு ஏற்ற வாழ்விடத்தை உருவாக்கும் போட்டி ஒன்றை நாசா 2015ஆம் ஆண்டு அறிவித்தது. முப்பரிமாண அச்சாக்க தொழில்நுட்பத்தின் (3D printing) மூலம் நான்கு விண்வெளி வீரர்கள் தங்கும் வகையில் ஆயிரம் சதுரடியில் வாழ்விடத்தை உருவாக்குவதே அந்த போட்டியின் இலக்கு. வாழ தேவையான வசதிகளுடன் மின்சார அமைப்பு, குழாய்கள், விண்வெளி கருவிகள் அனைத்தும் இருக்கும் வகையில் வாழ்விட கட்டிடத்தை உருவாக்க வேண்டும். அந்தப் போட்டி மூன்று கட்டமாக நடந்தது.
(X-Arc நிறுவனம் உருவாக்கிய வாழ்விடத்தின் மாதிரி. புகைப்பட உதவி: X-Arc/NASA)
வாழ்விட வடிவமைப்பின் வரைபடத்திற்காக முதற்கட்ட போட்டி நடந்தது. வாழ்விடத்தை கட்டுவதற்கு தேவையான பொருட்களுக்கு இரண்டாம் கட்ட போட்டி நடந்தது. Building Information Modeling என்ற மென்பொருளைக் கொண்டு வாழ்விட மாதிரியை கணினியில் உருக்குவாக்குவதற்கும், அந்த மாதிரியின் மூன்றில் ஒரு பங்கு அளவு வாழ்விடத்தை முப்பரிமாண அச்சாக்கத்தின் மூலம் கட்டுவதற்கும் கடைசிக்கட்ட போட்டி நடந்தது.
மறுசுழற்சி செய்யக்கூடிய அல்லது செவ்வாய் அல்லது நிலாவில் கிடைக்கக்கூடிய பொருட்களை கொண்டு கட்டிடத்தை கட்டவேண்டும் என்பது போட்டியின் முக்கிய நெறிமுறை. போட்டியில் கலந்து கொண்ட குழுக்களுக்கு நாசா $31.5 லட்சம் பணம் கொடுத்தது. இந்தப் பணத்தை போட்டியின் பல்வேறு கட்டங்களில் பகிர்ந்து கொடுத்தார்கள். போட்டியில் மொத்தம் அறுபது குழுக்கள் கலந்து கொண்டன. போட்டியாளர்களின் கட்டிட வடிவமைப்புக்களை வைத்து ஜூன் 29, 2018ல் பத்து குழுக்களை அடுத்தக்கட்ட போட்டிக்கு நாசா தேர்வு செய்தது. பின்னர், மென்பொருள் மூலம் வடிவமைக்கப்பட்ட மாதிரியையும், அந்த மாதிரியின் நடைமுறை பண்புகளையும் அடிப்படையாக கொண்டு முதல் ஐந்து குழுக்களை நாசா தேர்வு செய்தது.
(Al SpaceFactory நிறுவனத்தின் மார்சா வாழ்விட மாதிரி. புகைப்பட உதவி: Al SpaceFactory)
கடைசிக்கட்ட போட்டிக்கு நியு யார்க்கை சேர்ந்த Al SpaceFactory என்ற நிறுவனமும், பென்சில்வேனியா மாநில பல்கலைகழக குழுவும் தேர்வாகின. இந்த இரண்டு குழுக்களும் நான்கு நாட்களில் வாழ்விடத்தை கட்டிமுடித்தார்கள். அந்த நான்கு நாட்களில் முப்பரிமாண அச்சாக்க எந்திரம் முப்பது மணி நேரம் வேலை செய்து கட்டிடத்தை எழுப்பியிருக்கிறது. முடிவாக Al SpaceFactory நிறுவனத்தின் வாழ்விட கட்டிடத்திற்கு முதல் பரிசாக $5 லட்சத்தை நாசா வளங்கியது. பென்சில்வேனியா மாநில பல்கலைகழக குழுவிற்கு இரண்டாம் பரிசாக $2 லட்சம் கிடைத்தது.
குறைந்த அளவு மனிதர்களின் உதவியுடன் முப்பரிமாண அச்சாக்க எந்திரத்தை வைத்தே இரு குழுக்களும் வாழ்விடத்தை கட்டினார்கள். கட்டிடங்களை நாசாவின் வல்லுநர்கள் கவனமாக ஆய்வு செய்து மதிப்பிட்டார்கள். கட்டப் பயன்படுத்தப்பட்ட பொருட்களின் தரம், கட்டிடத்தின் வலிமை, அழுத்தத்தை தாங்கக்கூடிய திறன் மற்றும் கசிவு எதுவும் ஏற்படாமல் இருக்கின்றதா என்பதை எல்லாம் வல்லுநர்கள் ஆராய்ந்தார்கள்.
Al SpaceFactory நிறுவனம் வடிவமைத்த வாழ்விட கட்டிடமான மார்சாவை (MARSHA) முட்டை வடிவில் உருவாக்கியிருக்கிறார்கள். மார்சாவின் உட்புறம் காற்றழுத்தக் கட்டுப்பாட்டைக் கொண்டது. பசால்ட் (basalt composite) என்னும் பாறை கலவையோடு தாவரங்களில் இருந்து எடுக்கப்பட்ட பல்பகுதியமும் (polymer) கலந்து மார்சாவை கட்டியிருக்கிறார்கள். செவ்வாய் கோளில் பசால்ட் எளிதாக கிடைக்கும். செவ்வாய் கோளில் தாவரங்களை வளர்த்து பல்பகுதியமும் எடுத்துக்கொள்ளலாம். ஆகவே, விண்வெளி வீரர்களால் செவ்வாய் கோளிலேயே மார்சாவை கட்டிக்கொள்ள முடியும். மார்சா பலத்தளங்களை கொண்டது. ஆராய்ச்சி கூடங்கள், சமையலறை, வாழறை (living room), உடற்பயிற்சிக் கூடம் மற்றும் செடிகளை வளர்க்கும் அறை அனைத்தும் மார்சாவில் இருக்கும். மண் இல்லாமல் தண்ணீர் மற்றும் வாழ்விற்கு தேவையான கனிமங்களை மட்டும் வைத்தே மார்சாவில் தாவரங்களை வளர்த்துக்கொள்ளலாம்.
(Al SpaceFactory நிறுவனம் நியு யார்க்கில் கட்டிக்கொண்டிருக்கும் டெரா கட்டிடம். புகைப்பட உதவி: Al SpaceFactory)
முப்பரிமாண அச்சாக்கத்தைக் கொண்டு வேற்று கோள்களில் மட்டும் இல்லாமல் நமது பூமியிலும் வாழ்விடங்களை கட்டிக்கொள்ளலாம். வழக்கமான வீடுகளை கட்டத் தேவைப்படும் செலவை விட இம்முறையில் உருவாக்கப்படும் வாழ்விடங்களின் விலை குறைவாகவே இருக்கும். AI SpaceFactory நிறுவனம் ஏற்கனவே நியு யார்கின் காரிசன் பகுதியில் மார்சா போன்ற ஒரு வாழ்விடத்தை உருவாக்கி கொண்டிருக்கிறது. அக்கட்டிடத்திற்கு TERA (டெரா) என்று பெயரிட்டிருக்கிறார்கள். மார்சாவை பிரித்து அதில் இருந்து எடுக்கப்பட்ட பொருட்களை வைத்தே டெராவை கட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment