சுமார் 74,000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தோனேசியாவின் சுமாத்திரா தீவில் உள்ள தோபா (Toba) எரிமலை வெடித்தது. அந்த எரிமலை வெடிப்பில் உருவான புகையும், தூசியும் கதிரவனை மறைத்து, உலகத்தின் வெட்பத்தை குறைத்ததாக அறிவியலாளர்கள் கருதுகிறார்கள். அந்த எரிமலை வெடிப்பில் உருவான கண்ணாடி துகள்களை சில ஆண்டுகளுக்கு முன்பு தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடித்தார்கள். தென் ஆப்பிரிக்காவிற்கும் தோபா ஏரிக்கும் இடையான தூரம் எட்டாயிரம் கிலோ மீட்டருக்கும் மேல் இருக்கும். அவ்வளவு தூரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கண்ணாடித் துகள்கள் அந்த எரிமலை வெடிப்பு எத்தகைய ஆற்றல் மிக்கதாக இருந்திருக்கும் என்பதை உணர்த்துகிறது. ஆகையால் தான் சில அறிவியலாளர்கள் அந்த எரிமலை வெடிப்பில் மனிதர்கள் பலர் இறந்திருக்கலாம் என்று கருதிவந்தார்கள். இந்நிலையில் தான் சுமார் 80,000 முதல் 26,900 ஆண்டுகள் வரை பழமையான கல் கருவிகளை இந்தியாவில் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதாவது தோபா எரிமலை நிகழ்விற்கு முன்பும், அது நிகழ்ந்த போதும், அதன் பின் பல ஆயிரம் ஆண்டுகளுக்கும் இந்தியாவில் மனிதர்கள் வாழ்ந்ததை இந்தக் கண்டுபிடிப்பு சுட்டிக்காட்டுகிறது. இதனால் பல அறிவியலாளர்கள் வியப்பில் ஆழ்ந்திருக்கிறார்கள்.
![]() |
கல் கருவிகள் (இந்த ஆய்வில் எடுக்கப்பட்டது அல்ல. புகைப்பட உதவி: Holmespj, Pixabay) |
பன்னாட்டு அறிவியலாளர்கள் குழு ஒன்று மத்திய பிரதேசத்தின் சோன் (Son River) ஆற்றங்கரையில் இருக்கும் தாபா (Dhaba) என்னும் இடத்தில் இந்த கல் கருவிகளை கண்டுபிடித்து இருக்கிறார்கள். தாபாவில் மூன்று இடங்களில் இருந்து கல் கருவிகளை தோண்டி எடுத்தார்கள். அவற்றை Infrared Stimulated Luminescence என்னும் தொழில்நுட்பம் மூலம் ஆராய்ந்து கற்களின் வயதை கண்டறிந்தார்கள். முதல் இடத்தின் அடி அடுக்கில் இருந்து எடுக்கப்பட்ட கற்கள் சுமார் 79,000 – 78,000 ஆண்டுகள் பழமையானதாக இருந்தன. அதே இடத்தின் மேல் அடுக்கில் இருந்து எடுக்கப்பட்ட கற்கள் சுமார் 70,600 – 65,200 ஆண்டுகள் பழமையானதாக இருந்தன. இரண்டாம் இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட கல் மாதிரிகள் சுமார் 55,000 – 37,000 ஆண்டுகள் பழமையானதாக இருந்தன. மூன்றாம் இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட கல் மாதிரிகள் சுமார் 55,100 – 26,900 ஆண்டுகள் பழமையானதாக இருந்தன. அதாவது அந்தப் பகுதியில் வாழ்ந்த மனிதர்கள் சுமார் 79,600 – 26,900 ஆண்டுகளுக்கு முன்பு வரை கல் கருவிகளை உருவாக்கி கொண்டிருந்திருக்கிறார்கள். ஆக, தோபா எரிமலை வெடிப்பதற்கு சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் மனிதர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை இந்தக் கல் கருவிகள் உணர்த்துகின்றன. அதோடு அவர்கள் எரிமலை வெடித்த காலத்தில் உயிர் பிழைத்து இருந்திருக்கிறார்கள் என்பதும் தெளிவாகுகிறது. ஏற்கனவே கருதி வந்தது போல் தோபா எரிமலையின் தாக்கம் இல்லையோ என்று அறிவியலாளர்களை இந்தக் கண்டுபிடிப்பு யோசிக்க வைத்திருக்கிறது.
![]() |
சோன் ஆற்றை குறிக்கும் இந்திய வரைபடம் |
இதில் இன்னொரு குறிப்பிடத்தக்க செய்தி என்ன என்றால் – இந்திய மனிதர்கள் கல் கருவிகளை செய்ய பயன்படுத்திய பாணி ஆப்பிரிக்கா, அரேபியா மற்றும் ஆசுதிரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பாணியை ஒத்து இருக்கின்றது. அதாவது ஆப்பிரிக்க மனிதர்கள் எப்படி கல் கருவிகளை செய்தார்களோ அதே போல் தான் இந்திய மனிதர்களும் செய்திருக்கிறார்கள். மனிதர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து வெளியேறி ஆசியா மற்றும் ஆசுதிரேலியாவில் குடியேறினார்கள் என்ற கோட்பாட்டை இந்தக் கண்டுபிடிப்பு மேலும் உறுதி செய்கிறது. இந்தக் கோட்பாட்டை மரபணு ஆய்வுகள் உறுதி செய்திருப்பது நாம் ஏற்கனவே அறிந்ததே.
Comments
Post a Comment