- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
மனித வரலாற்றில் வெற்றிக்கரமாக செயல்படுத்தப்பட்ட அறிவியல் திட்டங்களில் ஒன்று கபிள் விண்வெளித் தொலைநோக்கி. இதை அமெரிக்க விண்வெளி கழகமான நாசாவும் ஐரோப்பிய விண்வெளி கழகமான ஈசாவும் கூட்டாக உருவாக்கினார்கள். 28 ஆண்டுகளுக்கு முன், ஏப்ரல் 24, 1990ஆம் ஆண்டு கபிள் விண்ணில் ஏவப்பட்டது. அப்போது இருந்து நமது வானியில் தொடர்பான அறிவை விரிவு படுத்தி வருகிறது கபிள். விண்மீன்களின் பிறப்பு மற்றும் இறப்பு, ஒன்று சேரும் விண்மீன் பேரடைகள் (galaxy) மற்றும் விரிவடையும் அண்டம் போன்ற விண்வெளி நிகழ்வுகளை ஹபிளைக் கொண்டு நாம் கண்காணித்து வருகின்றோம். கபிளின் உதவியுடன் நம் ஆதவக் குடும்பத்தில் இருக்கும் கிரகங்கள் மற்றும் நிலவுகள், நெபுலா, விண்மீன்கள் பிறக்கும் இடங்கள் (stellar nurseries) மேலும் ஆயிரக்கணக்கான விண்மீன் பேரடைகளை பார்த்திருக்கின்றோம். கரும்பொருள் (dark matter) வரைபடத்தை உருவாக்கவும், கருந்துளைகள் இருப்பதற்கான சான்றுகளை கண்டுபிடிக்கவும் கபிளே நமக்கு உதவியது.
(கபிள் விண்வெளி தொலைநோக்கி - விக்கிப்பீடியா)
இவ்வளவு சிறப்புகள் உடைய கபிளின் 28ஆம் ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் கபிள் எடுத்த இரண்டு புதிய புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது. நான்கு ஆயிரம் ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் இருக்கும் லகூன் நெபுலாவின் (Lagoon nebula) புகைப்படங்களே அவை. வியக்க வைக்கும் அந்த அழகிய புகைப்படங்கள் கண்களுக்கு புலனாகும் ஒளியைக் கொண்டும், அகச்சிவப்பு ஒளியைக் கொண்டும் எடுக்கப் பட்டிருக்கிறது. இது வரை 15 லட்சத்திற்கும் மேலான கண்காணிப்புக்களை (obervations) கபிள் மேற்கொண்டிருக்கிறது. அவற்றில் கழுகு நெபுலாவின் ‘படைப்பின் தூண்கள் (Eagle Nebula’s ‘Pillars of Creation’), the Hubble Ultra Deep Field, The Sombrero விண்மீன் பேரடை போன்ற படங்கள் அடையாளச் சின்னங்களாக விளங்குகின்றன. புதிதாக வெளியிடப்பட்டுள்ள லகூன் நெபுலாவின் புகைப்படங்களும் அத்தகைய அடையாளச் சின்னங்களாக இருக்கின்றன.
(லகூன் நெபுலா - புகைப்பட உதவி: NASA/ESA/STScl )
லகூன் நெபுலா முதன் முதலாக இத்தாலிய வானியல் வல்லுநரான சியோவானி பாடிசுடா கோடியர்னா (Giovanni Battista Hodierna) என்பவரால் 1654ஆம் ஆண்டிற்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டது. இதை பைனாக்குலர்களை வைத்தே வானில் பார்க்க முடியும். நாசா வெளியிட்டுள்ள வண்ணங்கள் மிகுந்த புகைப்படத்தில் மேகங்களைப் போன்று தோற்றம் அளிக்கும் காற்று, தூசிப் படலம் மற்றும் ஒளிரும் விண்மீன்கள் இருக்கின்றன. படத்தின் நடுவே ஒளிரும் விண்மீனின் பெயர் கெர்செல் 36 (Herschel 36). இந்த விண்மீன் நமது ஆதவனை விட 32 மடங்கு அதிக எடையும் 2 லட்சம் மடங்கு அதிக ஒளியும் கொண்டது. கெர்செல் 36 அதிக ஆற்றல் உடைய இளம் விண்மீன். அதன் அகவை 10 லட்சம் ஆண்டுகள். நமது ஆதவனின் அகவை 500 கோடி ஆண்டுகள். நாசாவின் கூற்று படி கெர்செல் இன்னும் 10 லட்சம் ஆண்டுகள் உயிர்ப்புடன் இருக்கும். நமது ஆதவன் இன்னும் 500 கோடி ஆண்டுகள் உயிர்ப்புடன் இருக்கும்.
(லகூன் நெபுலா (அகச்சிவப்பு ஒளி) - புகைப்பட உதவி: NASA/ESA/STScl)
இந்தப் புகைப்படங்கள் லகூன் நெபுலாவின் 4 ஒளி ஆண்டு அளவை மட்டும் காட்டுகின்றன. கெர்செல் விண்மீனைச் சுற்றி புற ஊதா கதிர்களும் விண்வெளி காற்று மற்றும் தூசிகளும் நிறைந்திருப்பதை காண முடிகிறது. விண்மீனில் இருந்து அகன்று வரும் தூசிப் படலத்தில் நீல நிறத்தில் இருப்பது ஒளிரும் ஆக்சிஜன் ஆகும். செந்நிற தூசி படலம் ஒளிரும் நைட்ரஜன். அடர் ஊதா நிறத்தில் இருக்கும் தூசி படலம்ஹைட்ரஜன்,ஆக்சிஜன் மற்றும் நைட்ரஜனின் கலவை ஆகும்.
அதிக தூர விண்வெளி பயணங்கள் நடைமுறைக்கு இயல்பாகும் போது, மனிதர்கள் இது போன்ற வியக்கத்தக்க விண்வெளி நிகழ்வுகளுக்கு அருகே சென்று கண்டு களிக்க முடியும் என்று நினைக்கின்றேன்.
(நீங்கள் விண்வெளி பயணத்திற்கான எதிர்கால விண்கலங்களைப் பற்றி தெரிந்து கொள்ள விரும்பினால், எங்களின் முந்தையை கட்டுரையை இங்கு படிக்கவும்)
Comments
Post a Comment