- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
எகிப்தில் இருக்கும் Ptahmes என்பவரின் கல்லறையில் இருந்து 3200 ஆண்டுகள் பழமையான பாலாடைக்கட்டி (cheese) ஒன்றை இத்தாலியின் கட்டானியா (Catania) பல்கலைகழகம் மற்றும் எகிப்தின் கெய்ரோ பல்கலைகழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்திருக்கிறது. பண்டைய கீழ் எகிப்தின் தலைநகராக இருந்த மெம்பிசு (Memphis)நகரின் மேயராக இருந்தவர் Ptahmes. இவர் பார்வோன்களான (Pharaoh) முதலாம் செட்டி (Seti I, 1290 – 1279 கிமு) மற்றும் இரண்டாம் ராமேசஸ் (Ramses II, 1279 – 1213 கிமு) ஆட்சிக் காலங்களில் உயர் மேலாளராக பணிபுரிந்தவர். இந்த இரண்டு மன்னர்களும் எகிப்தின் பத்தொன்பதாவது ஆட்சித் தலைமுறையை (dynasty) சேர்ந்தவர்கள். 1885ஆம் ஆண்டில் புதையலை தேடிய சிலரால் இந்த கல்லறை கண்டுபிடிக்கப்பட்டது. கல்லறை இருந்த இடத்தை பதிவு செய்யாமல் போனதால், அது எங்கிருக்கிறது என்று நூறு ஆண்டுகளும் மேல் தெரியாமல் இருந்தது. பின்னர், 2010ஆம் ஆண்டு தொல்பொருள் ஆய்வாளர்களால் Ptahmesசின் கல்லறை மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது.
![]() |
(பாலாடைக் கட்டி - விக்கிப்பீடியா) |
கெய்ரோ பல்கலைகழக விஞ்ஞானிகள் 2013 – 2014 ஆண்டுகளில் அந்த கல்லறையில் அகழ்வாராய்ச்சி செய்த போது உடைந்த சில குடுவைகளையும், பாலாடைக்கட்டியையும் கண்டுபிடித்தார்கள். கட்டியாக, வெள்ளை நிறத்தில் இருந்த பாலாடைக்கட்டி கேன்வாஸ் துணியில் சுற்றப்பட்டு உடைந்த குடுவையில் இருந்தது. நுண்ணோக்கி, X-Ray Diffractometer, Mass spectrometry போன்ற அறிவியல் தொழில்நுட்பங்களை வைத்து பாலாடைக்கட்டியில் என்னென்ன வேதியல் பொருட்கள் இருக்கின்றன என்பதை விஞ்ஞானிகள் ஆராய்ந்தார்கள். குறிப்பாக,பாலாடைக்கட்டியில் என்னென்ன புரதங்கள் (protein) மற்றும் புரதக்கூறுகள் (peptides) இருந்தன என்று ஆய்வு செய்தார்கள்.
பால் பொருட்களில் வழக்கமாக இருக்கும் புரதங்களான casein, lysozyme மற்றும் serum albumin போன்றவை பாலாடைக்கட்டியில் இருந்ததை உறுதிசெய்தார்கள். ஆடு, வெள்ளாடு, பசு மாடு மற்றும் எருமை மாட்டு பால்களில் இருக்கும் புரதக் கூறுகள் பாலாடைக்கட்டியில் இருப்பதாக பரிசோதனையில் கண்டுபிடித்தார்கள். இதில் இருந்து அந்த பாலாடைக் கட்டியை பசு மாடு மற்றும் ஆட்டு பால்களை கலந்து உருவாக்கி இருக்கலாம் என்பது தெளிவாகிறது. பொதுவாக, பாலாடைக்கட்டிகள், தயிர் மற்றும் பல நொதிக்க வைக்கப்படும் (fermentation) உணவு வகைகளை லாக்டிக் அமில பாக்டீரியாக்களை வைத்து உருவாக்குவார்கள். அத்தகைய பாக்டீரியாக்கள் எதுவும் இந்த பாலாடைக்கட்டியில் கண்டுபிடிக்கப்படவில்லை.
மாறாக, Brucella melitensis என்னும் பாக்டீரியாவில் இருக்கும் புரதக்கூற்றை இந்த ஆய்வில் கண்டுபிடித்திருக்கிறார்கள். மாடுகள், ஆடுகள் மற்றும் மனிதர்களில் brucellosis என்னும் நோயை இந்த பாக்டீரியா உண்டுபண்ணும். சரியாக காய்ச்சாத பால் மற்றும் சரியாக வேக வைக்காத இறைச்சிகளில் இந்த பாக்டீரியா இருக்கும். சோடியம் கார்பனேட்டு என்ற வேதியல் மூலக்கூறு கல்லறை மண்ணில் இருந்ததையும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். இது மண்ணை நீர்க்காரமாக (alkaline) ஆக்கிவிடும் தன்மை கொண்டது. திசுக்களை அரிக்கும் தன்மையும், எரிதன்மையும் கொண்டது சோடியம் கார்பனேட்டு. இத்தகைய சூழலில் இந்த பாலாடைக்கட்டி மூவாயிரம் ஆண்டுகளுக்கும் மேல் சிதையாமல் இருந்திருப்பது வியப்பை அளிப்பதாக விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.
இந்த சுவையார்வமான செய்தியைப் போல், மனிதர்கள் 14,400 ஆண்டுகளுக்கு முன்பே ஜோர்டானில் ரொட்டி தயாரித்தார்கள் என்ற வியக்க வைக்கும் கண்டுபிடிப்பு போன மாதம் வெளியானது. அதுவும் மனிதர்கள் விவசாயம் செய்யத் தொடங்குவதற்கு நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக ரொட்டி தயாரித்து இருக்கிறார்கள்.
Comments
Post a Comment