- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
கடந்த 15 கோடி ஆண்டுகளாக சிலி நாட்டின் அட்டகாமா பாலைவனம் மிகவும் வறண்ட பகுதியாக இருந்து வருகிறது. அட்டகாமா பாலைவனத்தின் மண் மிகுந்த உப்புத்தன்மை கொண்டது. நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் அட்டகாமா பாலைவனத்தில் மழை பெய்வதாக தட்பவெட்ப ஆராய்ச்சிகள் கூறுகின்றன. ஆனால், 2015 ஆம் ஆண்டிற்கு முன்பு வரை 500 ஆண்டுகளாக அட்டகாமாவில் மழை பெய்யவில்லை. 2015 ஆம் ஆண்டில் இரு முறையும், 2017 ஆம் ஆண்டில் ஒரு முறையும் அங்கு மழை பெய்து இருக்கிறது. அட்டகாமா பாலைவனத்தில் மழை பெய்து இருப்பது நமக்கு நல்ல செய்தியாக தோன்றலாம். ஆனால், பல ஆண்டுகளாக அட்டகாமா பாலைவனத்தின் மிகுந்த வறண்ட சூழ்நிலையில் வாழ்ந்து வந்த பாக்டீரியாக்களுக்கு அது ஒரு கெட்ட செய்தியாக அமைந்து இருக்கிறது. மேற்கூறிய ஆண்டுகளில் பெய்த மழைகளுக்கு பின் 75% முதல் 85% வரையிலான பாக்டீரியா இனங்கள் அழிந்துவிட்டதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்து இருக்கிறார்கள். திடீர் என்று தண்ணீர் அளவு அதிகரித்து, சவ்வூடு பரவல் அதிர்ச்சி (osmotic shock) ஏற்பட்டதால் தான் பாக்டீரியாக்கள் அழிந்து விட்டதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
![]() |
(அட்டகாமா பாலைவனம், சிலி. புகைப்பட உதவி: MonicaVolpin, Pixabay) |
மிகவும் வறண்ட தன்மை, மிகுந்த உப்புத் தன்மை மற்றும் மிகுந்த புற ஊதாக் கதிர் போன்ற அட்டகாமாவின் தீவிர சூழ்நிலைகளில் வாழ பழக்கம் கொண்டவை அட்டகாமா பாக்டீரியாக்கள். அத்தகைய பதினாறு பாக்டீரியா இனங்கள் அங்கு வாழ்ந்ததை இதற்கு முன் கண்டுபிடித்து இருந்தார்கள். 2015 மற்றும் 2017 ஆண்டுகளில் பெய்த அரிய மழைகளால் அட்டகாமாவில் கடற்காயல்கள் (lagoons) உருவாகின. மூன்று கடற்காயல்களில் இருந்து மாதிரிகளை எடுத்து,அவற்றில் என்னென்ன பாக்டீரியா இனங்கள் இருக்கின்றன என்று விஞ்ஞானிகள் ஆராய்ந்தார்கள். ஆர்.என்.ஏ. (RNA) பரிசோதனை செய்தும்,நுண்நோக்கிகளின் மூலம் ஆராய்ந்தும்,ஆய்வு கூடத்தில் பாக்டீரியாக்களை வளர்த்தும் மாதிரிகளில் இருந்த பாக்டீரியா இனங்களை கண்டறிய முற்பட்டார்கள். ஆய்வுகளின் முடிவில், ஏற்கனவே கண்டறியப்பட்ட பதினாறு பாக்டீரியா இனங்களில் வெறும் நான்கு இனங்கள் மட்டும் தான் உயிர் பிழைத்து இருப்பதை கண்டுபிடித்து இருக்கிறார்கள். அதாவது, அட்டகாமா பாலைவனத்தில் நீரின் அளவு திடீர் என்று அதிகரித்ததால் பன்னிரண்டு பாக்டீரியா இனங்கள் அழிந்துவிட்டன.
![]() |
(அட்டகாமா பாலைவனம். புகைப்பட உதவி: PaisJoana, Pixabay) |
அட்டகாமா பாலைவனத்தில் மழை பெய்த நிகழ்வை செவ்வாய் கிரகத்தில் அது போல் ஏற்பட்ட நிகழ்வோடு விஞ்ஞானிகள் ஒப்பிடுகிறார்கள். ஏனெனில், செவ்வாய் கிரகமும் அட்டகாமா பாலைவனத்தை போல் மிகுந்த வறண்ட சூழ்நிலையை கொண்டது. ஆகையால், அட்டகாமாவை ஆராய்வதன் மூலம் செவ்வாய் கிரகத்தின் சூழ்நிலைகளை நம்மால் புரிந்து கொள்ள முடியும். அதோடு, செவ்வாய் கிரகத்தில் இனி எந்த மாதிரியான மாற்றங்கள் ஏற்படலாம் என்றும் நம்மால் ஓரளவு கணிக்க முடியும். அட்டகாமா பாலைவனத்தில் மழை பெய்து பாக்டீரியாக்கள் அழிந்து போனது போல், செவ்வாய் கிரகத்திலும் மாபெரும் வெள்ளங்கள் ஏற்பட்டு அங்கு முற்காலத்தில் வாழ்ந்த உயிர்கள் அழிந்து போய் இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருத்து கூறியிருக்கிறார்கள்.
Comments
Post a Comment