- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
உலக சுகாதார அமைப்பு (WHO) வெளியிட்டிருக்கும் தகவலின் படி 2013ஆம் ஆண்டு 12.5 லட்சம் மக்கள் சாலை விபத்துகளில் உயிர் இழந்திருக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் சுமார் இரண்டு முதல் ஐந்து கோடி மக்கள் உலக அளவில் சாலை விபத்துகளில் காயமடைகிறார்கள். சாலை விபத்து அல்லது மற்ற எந்த விபத்தின் மூலமும், மருத்துவ குறைபாடுகளினாலும் உடலின் முக்கிய உறுப்புகளான கண்கள்,கைகள் மற்றும் கால்களை இழப்பது மக்களின் மொத்த வாழ்க்கையையும் பாதிக்கிறது. நல்ல வேளையாக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தினால், விஞ்ஞானிகளும் தனியார் நிறுவனங்களும் கை, கால் இழந்தவர்களுக்கு இயந்திர கைகளையும் கால்களையும் உருவாக்கி கொண்டிருக்கிறார்கள். இத்தகைய கைகளையும் கால்களையும் உயிர் மின்னணுவியலை (bionics) அடிப்படையாக கொண்டு உருவாக்குகிறார்கள். உயிர் மின்னணு கைகளும் கால்களும் கை, கால் இழந்தவர்கள் இயல்பாக வாழ உதவுகின்றன.
(உயிர் மின்னணு கை - விக்கிப்பீடியா)
இந்தக் கட்டுரையில் உயிர் மின்னணு கைகளைப் பற்றி சிறிது பார்ப்போம். மனிதர்கள் கைகளை இழக்கும் போது, வழக்கமாக கைகளை இயக்கும் நரம்புகள் மீதம் உள்ள தசைகளில் இருக்கும். அந்த நரம்புகளுக்கு மூளை வழக்கம் போல் சமிக்கைகளை அனுப்பும். கை, கால்களை இழந்த போதும் சிலர் தங்களின் இழந்த கைகள் அல்லது கால்களை உணருவார்கள். அந்த உணர்ச்சிக்கு ஆங்கிலத்தில் Phantom Limb என்று பெயரிட்டு இருக்கிறார்கள். உயிர் மின்னணு கைகள் அத்தகைய சமிக்கைகளை நரம்புகளின் வழியே பெற்று இயங்கும். மூளையின் சமிக்கைகளை கம்பியற்ற முறையில் (wireless) அனுப்பியும் கூட மின்னணு கைகளை இயக்க முடியும்.
மனதால் இயங்கும் மின்னணு கை
அமெரிக்காவின் பாதுகாப்பு தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் அமைப்பான Defense Advanced Research Projects Agency (DARPA) போரில் காயம்பட்ட ராணுவ வீரர்களுக்கு செயற்கை கை,கால்களை உருவாக்குவதற்காக Revelutionizing Prosthetics என்ற திட்டத்தை 2006ஆம் ஆண்டு தொடங்கியது. இயந்திர கைகளை விற்பனைக்கு கொண்டு வருவதும் அந்த திட்டத்தின் குறிக்கோள் ஆகும். அந்த திட்டத்தின் மூலம் நிதி உதவி பெற்று மனதால் இயங்கக்கூடிய உயிர் மின்னணு கைகளை உருவாக்கி வருகிறது ஜான் காப்கின்ஸ் பல்கலைகழகத்தின் Applied Physics Laboratory (JHUAPL) ஆய்வுக் கூடம். பொதுவாகவே,விண்வெளி கழகங்கள் மற்றும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி துறைகள் உருவாக்கும் பல தொழில்நுட்பங்களை மக்களின் நலனுக்காக மருத்துவ உலகம் பயன்படுத்திக் கொள்ளவது இயல்பு.
JHUAPL உருவாக்கிய மனதால் இயங்க கூடிய உயிர் மின்னணு கைகளைப் பற்றி Motherboard மேலிருக்கும் செய்தி வீடியோவை வெளியிட்டது. அந்த உயிர் மின்னணு கைக்கு தனியாக உணரும் கருவி (sensor device) இருக்கும். அது மூளையில் இருந்து வரும் சமிக்கைகளை உள்வாங்கி, பின் உயிர் மின்னணு கைக்கு கம்பி தொடர்பு இல்லாமலேயே (wireless) அனுப்பி அதை இயக்கும்.
Bebionic உயிர் மின்னணு கை
வணிக ரீதியில் உயிர் மின்னணு கைகளை உற்பத்தி செய்யும் ஒரு ஜெர்மன் நிறுவனம், Bebionic. இவர்களின் உயிர் மின்னணு கைகள் மூளையின் சமிக்கைகளை நேரடியாக நரம்புகள் வழியாக பெற்று இயங்கும். இந்த இயந்திர கைகள் இயற்கை கைகளைப் போல் இயங்க கூடியன. 14 வகையான பிடிப்பு முறைகளையும் (grip patterns) துல்லியமான கட்டுப்பாடும் கொண்ட இவர்களின் உயிர் மின்னணு கைகளை வைத்து முட்டை போன்ற மென்மையான பொருட்களை மற்றும் இன்றி கனமான பொருட்களையும் தூக்க முடியும். இவர்கள் பல வகையான மணிக்கட்டுகளையும் சிலிக்கோனால் செய்யப்பட்ட கை உறைகளையும் விற்கிறார்கள். இவர்களின் சிலிக்கோன் கை உறைகள் இயற்கையைப் போல் தோற்றமளிக்கும் 19 வகையான நிறங்களிலும் கருப்பு நிறத்திலும் கிடைக்கிறது.
Open Bionics open source உயிர் மின்னணு கைகள்
UKவில் இருக்கும் Open Bionics நிறுவனம் முப்பரிமாண அச்சாக்க தொழில்நுட்பத்தின் (3D printing) மூலம் மலிவான உயிர் மின்னணு கைகளை உற்பத்தி செய்து விற்கிறார்கள். இவர்களின் உயிர் மின்னணு கைகள் எடை குறைந்ததாகவும் பலரும் வாங்க கூடிய விலையிலும் இருக்கிறது. குழந்தைகளுக்காக மார்வெல், டிஸ்னி மற்றும் ஸ்டார் வார்ஸ் கதாபாத்திரங்களை போன்ற உயிர் மின்னணு கைகளை தயாரிக்கிறார்கள். ஆனால் இவர்களுடைய உயிர் மின்னணு கைகளை UKவில் வாழ்பவர்கள் மட்டுமே வாங்க முடியும். இவர்கள் open source கொள்கையை பின்பற்றுவதால், யார் வேண்டுமானாலும் இவர்களின் தொழில்நுட்பத்தைப் பெற்று, அதை மேன்படுத்திக் கொள்ளலாம்.
Comments
Post a Comment