உலகை அழிக்கும் மாசுபாடு

சுமார் 450 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நமது பூமி உருவானது. 377 - 429 கோடி ஆண்டுகள் பழமையான நுண்ணுயிர்கள் வாழ்ந்ததற்கான சான்றை கனடாவில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். இது உலகில் உருவான முதல் உயிரினமாக இருக்கலாம். உலகில் இது வரை ஆறு பெரும் இனவழிப்பு நிகழ்வுகள் (mass extinction) நடந்திருக்கின்றன. அதன் மூலம் உலகின் முக்கால்வாசி உயிரினங்கள் அந்தந்த காலக்கட்டங்களில் அழிந்தன. மனிதர்களாகிய நாம் சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதன் மூலம் பூமியையே அழித்துக் கொண்டு இருக்கின்றோம். தொழிற்சாலைகள் மற்றும் மோட்டார் வாகனங்கள் மூலம் அழிவை உண்டாக்கும் பைங்குடில் வளிமங்களை (greenhouse gases) வெளியிட்டு காற்றை மாசுபடுத்துகின்றோம். திட,திரவ கழிவுகள் மூலம் நிலத்தையும் தண்ணீரையும் மாசுபடுத்துகின்றோம். அண்மை காலமாக, ப்ளாஸ்டிக் கழிவுகளின் மாசுபாடு மிகப் பெரிய சிக்கலாக உருவெடுத்துமனிதர்களை மட்டும் இல்லாமல் காட்டு மற்றும் நீர் வாழ் உயிரினங்களையும் பாதிக்கின்றது. 

காற்று மாசுபாடு
Chlorofluorocarbon (CFC) எனப்படும் வேதியல் பொருள் வளிமண்டலத்தை பாதிக்கும் ஒரு குறிப்பிடத்தக்க பைங்குடில் வளிமமாகும். இதை பெல்ஜிய வேதியலாளரான Frédéric Swarts 1890களில் உருவாக்கினார். இவை குளிர் பதனூட்டிகளாக பயன்படும். இவை பூமியின் வளிமண்டலத்தில் இருக்கும் ஓசோனை 4 சதவிகிதம் அழித்துவிட்டன. துருவ பகுதியின் படைமண்டலத்தில் (stratosphereஇருந்த ஓசோனை பெருமளவு இவை அழித்தன. அதற்கு ozone holeஎன்று பெயரிட்டார்கள். இதனால், CFCமற்றும் ஓசோனை அழிக்கும் பிற வேதியல் பொருட்களை உருவாக்க 1989ல் தடைவிதிக்கப்பட்டது. நாசாவின் ஆய்வின்படி 2075ஆம் ஆண்டில் தான் பூமியின் ஓசோன் அளவு இயல்பு நிலையை அடையும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. காற்று மாசுபாட்டிற்கு முக்கிய காரணம் மாசு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை முறையாக பின்பற்றாத தொழிற்சாலைகளாகும். 

காற்று மாசுபாடு
(தொழிற்சாலை மாசுபாடு. பட உதவி: SD-Pictures, Pixabay)

உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின் படி உலகில் மிகவும் மாசுபட்ட 20 நகரங்களில் 14 இந்திய நகரங்கள் இருக்கின்றன. ஆண்டுதோறும் சுமார் 70 லட்சம் மக்கள் காற்று மாசுபாட்டால் இறக்கின்றனர். காற்று மாசுபாட்டிற்கு இன்னொரு முக்கிய காரணம் மோட்டார் வாகனங்கள் வெளியிடும் பைங்குடில் வளிமங்களாகும். இது மனிதர்களையும் சுற்றுச்சூழலையும் பாதிகின்றது. உலகமெங்கும் அதிகரித்துவரும் மோட்டார் வாகன பயன்பாடு மேற்கொண்டு வளிமண்டலத்தை பாதிக்கும். காற்று மாசுபாடே புவி வெப்பம் அடைதலுக்கு முதற் காரணமாகும்.

பிளாஸ்டிக் (நெகிழி)
மனித கண்டுபிடிப்புகளிலேயே அதிகம் பயன்படுத்த தக்க பொருள் நெகிழியாகும். அதே நேரத்தில்மனிதர்கள் கண்டுபிடித்த மிகவும் மட்டமான பொருளாகவும் நெகிழி திகழ்கிறது. ஏனெனில்,பூமியில் புதைப்பதன் மூலம் நெகிழிகள் முழுவதுமாக அழிய ஆயிரம் ஆண்டுகள் ஆகும். சில நெகிழி புட்டிகள் அழிவதற்கு 450 ஆண்டுகளுக்கும் மேல் ஆகலாம். பொருட்களை சேமித்து வைப்பதற்கும்எடுத்துச் செல்வதற்கும் அதிக அளவில் நெகிழிகளை பயன்படுத்துவதால் எல்லாம் இடங்களிலும் மிகப்பெரிய மாசு உண்டாகிறது. பல செய்தி கட்டுரைகளின் படி,ஒவ்வொரு ஆண்டும் எண்பது லட்சம் டன் நெகிழிகளில் கடலை போய் அடைகின்றன. பறவைகள்மீன்கள் மற்றும் பிற கடல் வாழ் விலங்குகள் நெகிழிகளை உணவென்று எண்ணி உட்கொள்கின்றன. இதனால் மூச்சு அடைபட்டும்வயிற்றில் நெகிழிகள் அடைபட்டும் பல விலங்குகள் உயிர் இழக்கின்றன. எனவேநெகிழிகள் மனிதர்களை மட்டும் இல்லாமல் நிலம் மற்றும் கடலில் வாழும் உயிரனங்களையும் பாதிக்கின்றன. நெகிழிகள் நமது சுற்றுச்சூழலுக்கும் மிகப் பெரிய தீங்காக இருக்கின்றன. 

நெகிழி மாசுபாடு
(நெகிழி குப்பையில் மாட்டிக்கொண்டு தவிக்கும் பறவை - விக்கிமீடியா)

மரியானா அகழியில் நெகிழி கழிவுகள் 
உலகின் மிக ஆழமான பகுதி (36,070 அடிகள்) மரியானா அகழி (Mariana Trench). ஜப்பானின் கடல் - புவி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைப்பு (Japan Agency for Marine – Earth Science and Technology (JAMSTECT)) 1983 முதல் 2017 வரை ஆழ் கடலில் இருந்து தகவல்களை சேகரித்து வைத்திருக்கின்றது. அவர்கள் மரியானா அகழியின் 35,755 அடிகள்   ஆழத்தில் நெகிழி பைகள் இருந்ததை படம்பிடித்து இருக்கிறார்கள். நெகிழி கழிவுகளின் சிக்கல் எந்த அளவிற்கு பெரியதாக இருக்கிறது என்பதை இது உணர்த்துகிறது.  

எவரெஸ்ட் சிகரத்தில் டன் கணக்காக குப்பை
ஒவ்வொரு ஆண்டும் 600க்கும் மேற்பட்டவர்கள் எவரெஸ்ட் சிகரத்திற்கு செல்கிறார்கள். இதில் சிக்கல் என்னவென்றால்,இவர்கள் 120 டன் குப்பையை ஒவ்வொரு ஆண்டும் எவெரெஸ்ட்டில் விட்டுவிட்டு வருகிறார்கள். தி நியு யார்க் டைம்சு பத்திரிக்கையின் படி எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதற்கு $30,000 முதல் $100,000 வரை செலவாகும். இவ்வளவு பணம் செலவு செய்தும், சிரமப்பட்டு மலை ஏறியும் அழகான மலையை மாசுபடுத்துகிறார்கள் மனிதர்கள். இவ்வாறு தான் நாம் பூமியை அழித்துக்கொண்டு இருக்கின்றோம்.

Comments