- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
கம்பளி யானைகளும், டைனோசர்களும் நமது கவனத்தை ஈர்க்கும் அருமையான விலங்குகள். இவை முறையே 4,000 ஆண்டுகள் மற்றும் 6.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு அழிந்துவிட்டன. இந்த இரண்டு விலங்களும் விஞ்ஞானிகளை மட்டும் இல்லாமல், பாமர மக்களின் ஆர்வத்தையும் ஈர்க்ககூடியன. க்ளோனிங் தொழில்நுட்பம் மூலம் டைனோசர்களை மீண்டும் உயிர்ப்பிக்க வைக்கும் எண்ணத்தை ஜுராசிக் பார்க் திரைப்படமும், நூலும் பரவலாக மக்களிடம் பரப்பின. டைனோசர் க்ளோனிங்கை விட கம்பளி யானை க்ளோனிங் நடைமுறையில் ஓரளவு எளிதாக செயல்படுத்தக் கூடியது. ஏனென்றால், க்ளோனிங் செய்யப்பட்ட கம்பளி யானையின் கருவை யானையின் கருப்பையில் வைத்து வளர்க்க முடியும். மரபணு அடிப்படையில் கம்பளி யானைகளும் ஆசிய யானைகளும் நெருக்கிய உறவு உடையவை. கம்பளி யானைகளின் சராசரி உயரம் 8.9 – 11.2 அடி. அவற்றின் சராசரி எடை 6 டன்கள். உடல் அடிப்படையில் அவை ஆப்பிரிக்கபுதர் யானைகளைப் (Loxodonta Africana, 10.5 அடி உயரம், 6 டன் எடை) போல் இருக்கும். ரஷ்ய கூட்டாச்சியை சேர்ந்த சகா (யாகுட்டியா) குடியரசின் தலைவரான ஐசென் நிக்கோலேவ் (Aisen Nikolaev) பத்து ஆண்டுகளுக்குள் கம்பளி யானை க்ளோனிங் வெற்றிகரமாக முடிக்கப்படும் என்று அறிவித்து இருக்கிறார்.
![]() |
(கம்பளி யானை - விக்கிப்பீடியா) |
சகா குடியரசில் தட்பவெட்ப நிலை மிகத் தீவிரமாக இருக்கும். குளிர் காலத்தில் குளிர் சராசரியாக -35°Cக்கும் (-31°F) குறைவாக இருக்கும். இங்கே பனியில் உறைந்த குகை சிங்கங்கள், கம்பளி யானைகள், கம்பளி காண்டாமிருகங்கள், பண்டைய காட்டெருமை மற்றும் குதிரைகளின் உடல்களை கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆகையால் இந்த இடம் தொல்லுயிரியல் (paleontology) ஆய்வுகளுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றது. 2014ஆம் ஆண்டில் நிக்கோலேவும், அவருடைய நண்பர்களும் கம்பளி யானைகளை வைத்து பனியுக பூங்கா (Ice Age Park) ஒன்றை உருவாக்கும் திட்டத்தை அறிவித்திருந்தார்கள். கம்பளி யானைகள், குகை சிங்கங்கள் மற்றும் பண்டைய குதிரைகளை மீண்டும் உயிர்ப்பிக்க நிக்கோலேவ் மிகவும் ஆர்வமுடன் இருப்பதாக தெரிகிறது. கம்பளி யானையை க்ளோன் செய்ய ரஷ்ய, தென் கொரிய மற்றும் ஜப்பானியை விஞ்ஞானிகள் இணைந்து ஆராய்ச்சி செய்து கொண்டு இருக்கிறார்கள்.
டாலி (Dolly) என்று பெயர் இடப்பட்ட செம்மறி ஆடு தான் முதன்முதலாக வெற்றிகரமாக க்ளோனிங் செய்யப்பட்ட பாலூட்டி விலங்கு. 1996ஆம் ஆண்டு எடின்பரா பல்கலைக்கழத்தை (University of Edinburgh) சேர்ந்த விலங்கு அறிவியல் (Animal Science) ஆராய்ச்சி நிறுவனமான ரோசிலின் நிறுவனத்தின் விஞ்ஞானிகள் சர் இயன் வில்மட்டும் (Sir Ian Wilmut) கீத் கேம்பலும் (Keith Campbell) க்ளோனிங் முறையில் இந்த ஆட்டை உருவாக்கினார்கள். அதன் பின் குரங்கு, குதிரை, பூனை, பன்றி, ஒட்டகம் என்று பல விலங்குகளை க்ளோனிங் மூலம் பல்வேறு விஞ்ஞானிகள் உருவாக்கி இருக்கிறார்கள். நன்னெறி சிக்கல்கள் காரணமாக மனிதர்களை உருவாக்கும் க்ளோனிங்கிற்கு பல நாடுகள் தடை விதித்து இருக்கின்றன. ஐக்கிய இராச்சியம் (UK) மற்றும் சீனா போன்ற நாடுகள் மருத்துவ சிகிச்சைக்கு தேவையான க்ளோனிங் ஆராய்ச்சிகளை மட்டும் மேற்கொள்ள விஞ்ஞானிகளுக்கு அனுமதி கொடுத்திருக்கின்றன. இதன் மூலம் அவர்கள் மனித முளைய (embryo) அணுக்களை வைத்து குருத்தணு (stem cell) ஆய்வுகளை மேற்கொள்ளலாம்.
டாலி பற்றிய கீழே உள்ள வீடியோவை காணவும்
கம்பளி யானை க்ளோனிங் வெற்றிகரமாக நடந்து முடிந்தால், எதிர்காலத்தில் விஞ்ஞானிகள் மேலும் அழிந்து போன பல விலங்குகளை க்ளோனிங் செய்ய முயற்சி செய்வார்கள்.
Comments
Post a Comment