- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
மீண்டும் கபிள் தொலைநோக்கியின் (Hubble space telescope) உதவியோடு ஒரு அருமையான பொருளைவானியலாளர்கள் நமது அண்டத்தில் கண்டுபிடித்து இருக்கிறார்கள். அது ஒரு ஒளி மிகுந்த துடிப்பண்டம் (quasar) ஆகும். அது நமது பூமியில் இருந்து 1280 கோடி (12.8 பில்லியன்) ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கிறது. நமது அண்டத்தின் வயது சுமார் 1379.9 கோடி (13.799 பில்லியன்) ஆண்டுகள். ஆக, கபிள் தொலைநோக்கி புதிதாக படம் பிடித்திருக்கும் துடிப்பண்டத்தின் ஒளி உருவான போது நமது அண்டத்தின் வயது 100 கோடி ஆண்டுகள் மட்டும் தான். புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட துடிப்பண்டத்தை J043947.08+163415.7 என்று வகைப்படுத்தி இருக்கிறார்கள். 1950களில் விண்மீன் போன்ற இடங்களில் இருந்து ரேடியோ அலைகள் வருவதை ரேடியோ தொலைநோக்கிகள் மூலம் வானியலாளர்கள் கண்டுபிடித்தார்கள். அவற்றிற்கு ‘quasi-stellar radio sources’ என்று பெயர் வைத்தார்கள். அப்பெயரின் சுருக்கமே ‘quasar’. மிகவும் துடிப்பான மீப்பெரும் கருத்துளையை (supermassive black hole) நடுவில் வைத்திருக்கும் இளம் விண்மீன் பேரடைகள் (galaxies) தான் பொதுவாக துடிப்பண்டங்கள் எனப்படுகிறது. கருந்துளைகளை சுற்றி வரும் பொருட்கள் வெளியிடும் வெப்பம் மற்றும் ஒளியால் தான் துடிப்பண்டங்கள் ஒளி மிகுந்ததாக இருக்கின்றன.
![]() |
(ஒளி மிகுந்த துடிப்பண்டம். பட உதவி: ESA/NASA/NASA M. Kornmesser) |
இத்தகைய துடிப்பண்டங்களை வானவியலாளர்கள் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக ஆராய்ந்துகொண்டு இருந்ததாக Hubblesite குறிப்பிட்டு இருக்கின்றது. வியக்க வைக்கும் வகையில், பூமிக்கு அருகில் இருந்த விண்மீன் பேரடை ஒன்றின் உதவியுடன் தான் இந்த துடிப்பண்டத்தை கண்டுபிடித்து இருக்கிறார்கள். அந்த விண்மீன் பேரடை ’ஈர்ப்பு வில்லை’யை (gravitational lens) உருவாக்கி, துடிப்பண்டத்தின் ஒளியை ஐம்பது மடங்காகவும்,அதன் அளவை மூன்று மடங்காகவும் பெரிதுபடுத்தி காட்டி இருக்கிறது. ஈர்ப்பு வில்லையின் மூலம் கவனிக்கப்பட்ட துடிப்பண்டத்தின் ஒளி 600 டிரில்லியன் கதிரவன்களின் ஒளிக்கு சமமாக இருந்தது(1டிரில்லியன் = 1000 பில்லியன் அல்லது ஒரு லட்சம் கோடி; 600 டிரில்லியன் = 600 லட்சம் கோடி). ஈர்ப்பு வில்லையின் பெரிதுபடுத்தும் விளைவை நீக்கிவிட்டால் துடிப்பண்டத்தின் ஒளி 11 டிரில்லியன் கதிரவன்களின் ஒளிக்கு சமமாக இருக்கும். இந்த துடிப்பண்ட-விண்மீன் பேரடையில், ஒவ்வொரு ஆண்டும் சுமார் பத்தாயிரம் விண்மீன்கள் உருவாகுவதாக கணக்கிட்டு இருக்கிறார்கள். நமது பால் வழி விண்மீன் பேரடையில் ஆண்டிற்கு ஒரே ஒரு விண்மீன் தான் உருவாகுகிறது.
![]() |
(கபிள் விண்வெளி தொலைநோக்கி. புகைப்பட உதவி: நாசா, விக்கிப்பீடியா) |
புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட துடிப்பண்டத்தை கவாயின் (Hawaii) Mauna Keaவில் இருக்கும் James Clerk Maxwell தொலைநோக்கியை வைத்தும் ஆராய்ந்து கொண்டு இருக்கிறார்கள். முதலில், இந்த துடிப்பண்டத்தை பல தொலைநோக்கிகளை வைத்து ஆராய்ந்து இருக்கிறார்கள். பின்னர் கபிள் தொலைநோக்கியின் மூலம் அதைப் பார்த்து உறுதி செய்து இருக்கிறார்கள். இளம் அண்டத்தில் உருவான காற்றின் வேதியல் கலவை மற்றும் அதன் பண்புகளைப் பற்றி European Southern Observatory’s Very Large Telescopeயை வைத்து வானியலாளர்கள் குழு இப்போது ஆராய்ந்து கொண்டு இருக்கிறது. இந்த துடிப்பண்டத்தை Atacama Large Millimeter/submillimeter Array தொலைநோக்கிகளை வைத்து ஆராய்வதோடு, நாசாவின் எதிர்கால James Webb Space தொலைநோக்கியை வைத்தும் ஆராய திட்டமிட்டு இருக்கிறார்கள்.
Comments
Post a Comment