- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
பாக்டீரியா குழாய் போன்ற உறுப்பை வைத்துதனது சுற்றுச்சூழலில் இருக்கும் மரபணுவை (DNA) தனக்குள் எடுத்துக் கொள்ளும் காட்சியை விஞ்ஞானிகள் முதல் முறையாக கேமராவில் படம் பிடித்துள்ளனர். தங்களை கொல்லும் மருந்துகளுக்கு (antibiotics) எதிரான எதிர்ப்பு சக்தியை பெறவும், நோய்களை உருவாக்கும் பொருட்களை உற்பத்தி செய்ய உதவும் சக்தியை பெறவும் பாக்டீரியாக்கள் தங்களுக்குள் மரபணுக்களை பரிமாறிக் கொள்ளும். அவ்வகையான மரபணுக்களை வைத்து தான் பாக்டீரியாக்கள் மருத்துகளை (antibiotics) முறியடித்து வாழும். விலங்குகள் மற்றும் மனிதர்களின் உடலில் நோயை உண்டு பண்ணுவதற்கும் பாக்டீரியாக்களின் அவ்வகையான மரபணுக்களே காரணம். எடுத்துக்காட்டாக, பென்சிலின் மருந்து பாக்டீரியாக்களை கொல்லக் கூடியது. ஆனால் சில பாக்டீரியாக்கள் சில வேதியல் பொருட்களை வெளியிட்டு பென்சிலினை முறியடித்துவிடும். அதற்குறிய மரபணு அந்த பாக்டீரியாக்களில் இருக்கும். அத்தகைய பாக்டீரியாக்கள், பென்சிலினை முறியடிக்க கூடிய மரபணு இல்லாத பாக்டீரியாக்களுக்கு தங்களது மரபணுவை கொடுத்து உதவும்.
![]() |
(பாக்டீரியாக்கள் - விக்கிப்பீடியா) |
இத்தகைய மரபணு பரிமாற்றத்தை பாக்டீரியாக்கள் மூன்று வழிகளில் செய்யும். முதலாவதாக, சுற்றுச்சூழலில் இருக்கும் தேவையான மரபணுக்களை பாக்டீரியாக்கள் எடுத்துக்கொள்ளும். அதைத் தான் இப்போது முதல் முறையாக உடனொளிர்தல் நுண்ணோக்கியை வைத்து (fluorescence microscope) படம் பிடித்திருக்கிறார்கள். இரண்டாவதாக,நேரடி தொடர்பு மூலம் பாக்டீரியாக்கள் மரபணுக்களை பரிமாறிக் கொள்ளும். பாக்டீரியாக்கள் குழாய் வடிவ உறுப்பை உருவாக்கும். அதை ஆங்கிலத்தில் pilus (பன்மை: pili) என்று அழைப்பார்கள். இது, நாம் இளநீரை உறிந்து குடிக்கும் ஸ்ட்ரா போன்று இருக்கும். அந்த பைலஸ் (pilus) குழாய் இன்னொரு பாக்டீரியாவுடன் ஒட்டிக் கொள்ளும். பின்னர், ஒரு பாக்டீரியாவிடம் இருந்து இன்னொரு பாக்டீரியாவிற்கு மரபணு அந்த குழாயின் வழியே செல்லும். இந்த முறையான மரபணு பரிமாற்றத்தை அறிவியல்பூர்வமாக bacterial conjugation என்று அழைக்கிறார்கள்.
![]() |
(பாக்டீரியா மரபணுவை எடுத்துக்கொள்வதை விளக்கும் அனிமேசன்) |
மூன்றாவதாக,நுண்ணுயிர் உண்ணி அல்லது பாக்டீரியா உண்ணி எனப்படும் வைரஸ்கள் (bacteriophage) மூலம்மரபணுக்கள் பரிமாறிக்கொள்ளப்படுகிறது. பாக்டீரியா உண்ணி வைரஸ்கள் பாக்டீரியாக்களை மட்டும் தாக்கும் வைரஸ்களாகும். இவை பாக்டீரியாவிற்குள் தங்களின் மரபணுக்களை செலுத்தி, பல்கி பெருகும். பாக்டீரியாவிற்குள் புதிய வைரஸ்கள் உருவானவுடன், அவை பாக்டீரியாவை சுற்றி இருக்கும் மென்படலத்தை அழித்துவிட்டு வெளியேறிவிடும். அப்படி வெளியேறும் போது பாக்டீரியாக்களின் சில மரபணுக்களையும் எடுத்துச் செல்லும். அந்த மரபணுக்களை மறுபடியும் பாக்டீரியாக்களை தாக்கும் போது,அவற்றுள் செலுத்திவிடும். இத்தகைய மரபணு பரிமாற்றத்தை bacterial transduction என்று அழைக்கிறார்கள்.
இப்போது வெளியிடப்பட்டிருக்கும் ஆராய்ச்சியில்,விஞ்ஞானிகள் அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு பயன்படுத்தும் சாயங்களை (dyes) கொண்டு மரபணுக்களை சிவப்பு நிறமாகவும் பாக்டீரியாக்களை பச்சை நிறமாகவும் தெரியும்படி செய்தார்கள். உடனொளிர்தல் நுண்ணோக்கியைவைத்து நிறமாக்கப்பட்ட மரபணுக்களையும் பாக்டீரியாக்களையும் கண்காணித்தார்கள். பாக்டீரியாக்கள் குழாய் போன்ற உறுப்புகளை (pili) தங்கள் உடலில் இருந்து நீட்டித்து, அருகில் இருந்த மரபணுக்களோடு ஒட்டி இணைத்துக் கொண்டதை படம் பிடித்தார்கள். பின், ஒட்டிக் கொண்ட மரபணுவை, குழாயை வைத்தே தன்னுள் பாக்டீரியா இழுத்துக் கொண்டதையும் முதல் முறையாக படம் பிடித்திருக்கிறார்கள். வாழும் பாக்டீரியாக்களிலேயே பதிவு செய்யப்பட்ட இந்தக் காட்சிகளின் மூலம் பாக்டீரியாக்கள் தங்களின் சுற்றுச்சூழலில் இருந்து மரபணுக்களை எடுத்துக் கொள்வது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த மரபணு பரிமாற்ற நிகழ்வு பாக்டீரியாக்கள் மருந்து எதிர்ப்பு சக்தியையும்,நோய் உருவாக்கும் பொருட்களையும் பெற உதவும்.
எந்த சுற்றுச்சூழலாக இருந்தாலும் (எடுத்துக்காட்டாக நமது குடல் அல்லது மண்) ஒரே இடத்தில் பல வகையான பாக்டீரியா இனங்கள் வாழும். அத்தகைய போட்டி நிறைந்த சுற்றுச்சூழல்களில் உயிர் பிழைத்து இருக்கவும், உயிர் வாழவும் பாக்டீரியாக்கள் பலமாக இருக்கவேண்டியது முக்கியமானது. அப்படி பலம் பெறுவதற்காகத் தான் சுற்றுச்சூழலில் இருந்தும் பிற பாக்டீரியாக்களிடம் இருந்தும் மரபணுக்களை பாக்டீரியாக்கள் பெற்றுக் கொள்கின்றன.
Comments
Post a Comment