வரலாற்றில் பிரபலமான கலைப் பொருள் திருட்டுக்கள்

ஓவியங்களும் பிற கலைப் பொருட்களும் மதிப்புமிக்க சொத்துக்களாக இருக்கின்றன. பல கோடிகள் கொடுத்து பிரபலமான கலைப் பொருட்களை வாங்க செல்வந்தர்கள் விரும்புகிறார்கள். ஆகையால் கலைப் பொருள் திருடர்கள் தொடர்ந்து பிரபலமான கலைப் பொருட்களை திருட முயற்சிக்கிறார்கள். திருட்டு கலைப் பொருட்களை விற்பது கடினமாக இருந்தாலும், திருடர்கள் ஆபத்துகளை பொருட்படுத்தாமல் அவற்றை திருடுகிறார்கள். வரலாற்றில் பிரபலமான கலைப் பொருள் திருட்டுக்களில் சிலவற்றை இங்கு காண்போம். 
மோனா லிசா - கலைத் திருட்டு
(புகைப்பட உதவி: மோனா லிசா - Pixabay. மோனா லிசா இல்லாத அருங்காட்சியக சுவர் மற்றும் வின்சென்ச்சொ சொ- விக்கிப்பீடியா)

மோனா லிசா
பாரிஸ் லூவர் அருங்காட்சியகத்தில் இருந்து ஆகஸ்ட் 21, 1911ல் மோனா லிசா ஓவியம் திருடப்பட்டது தான் வரலாற்றில் மிகப் பிரபலமான கலைப் பொருள் திருட்டு ஆகும்.  இத்தாலிய திருடரான வின்சென்சொ பெருகியா (Vincenzo Peruggia) லூவர் பணியாளர்களைப் போல் வெண்ணிற அங்கி போன்ற ஒரு ஆடையை அணிந்து கொண்டு அருங்காட்சியகத்திற்குள் சென்று மோனா லிசா ஓவியத்தை திருடினார். திருடிய ஓவியத்தை பாரிஸில் இருந்த அவருடைய வீட்டில் இரண்டு ஆண்டுகளுக்கு மறைத்து வைத்திருந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அந்த ஓவியத்தை இத்தாலியின் புளோரன்ஸில் இருந்த Uffizi கலை அருங்காட்சியகத்திற்கு விற்க முயன்ற போது காவலர்களிடம் பிடிபட்டார். விசாரணையின் போது ஓவியத்தை அதன் தாயகத்திற்கு கொண்டு வருவதற்காகவே திருடியதாக கூறினார். அவரின் ‘நாட்டுப்பற்று’ மிக்க செயலுக்காக இத்தாலியர்களால் கொண்டாடப் பட்டார். ஒரு வருடம் 15 நாட்களுக்கு சிறைத் தண்டனை பெற்றாலும் ஏழு மாதங்களுக்கு மட்டுமே சிறையில் இருந்தார். இந்த திருட்டிற்கு பிறகு தான் மோனா லிசாவின் ஓவியம் மிக பிரபலமானது. 


Isabella Stewart Gardnerஅருங்காட்சியக திருட்டு 
வரலாற்றின் மிகப் பெரிய கலைப் பொருள் திருட்டு பாஸ்டனில் இருக்கும் இசபெல்லா ஸ்டீவார்ட் கார்ட்னெர் அருங்காட்சியகத்தில் மார்ச் 18, 1990ல் நடந்தது. அங்கிருந்து 8 ஓவியங்கள் 3 வரைபடங்கள் மற்றும் 2 கலைப் பொருட்கள் திருடப்பட்டன. திருடப்பட்ட 13 கலைப் பொருட்கள் $50 கோடி மதிப்பு உள்ளவை. திருட்டு நடந்த அன்று காவலர்களின் உடையில் வந்த இரண்டு திருடர்கள் காலை 1:24 மணிக்கு அருங்காட்சியகத்தின் கதவை தட்டினார்கள். அங்கு இருந்த அருங்காட்சியக பாதுகாவலர் ரிச்சர்ட்டு அபாத்திடம் அருங்காட்சியகத்தில் ஏதோ இடையூறு ஏற்பட்டிருக்கிறது என்று தொலைப்பேசி அழைப்பு வந்ததாகவும்,அதைப் பற்றி விசாரிக்கவே தாங்கள் வந்துள்ளதாகவும் கூறினார்கள். அவர்கள் கூறியதை நம்பிய  அபாத் அவர்களை உள்ளே அனுமதித்தார். உள்ளே வந்த திருடர்கள் அபாத்திற்கும் இன்னொரு பாதுகாவலருக்கும் கைவிலங்கு மாட்டி,  இருவரையும் duct tapeபினால் கட்டிப் போட்டார்கள். 
(இசபெல்லா ஸ்டீவார்ட் கார்ட்னெர் அருங்காட்சியகம் - விக்கிப்பீடியா)

பின் Vermeer, Rembrandt, Flinck, Manet மற்றும் Degas ஆகியோரின் கலைப் பொருட்களை திருடினார்கள். சுவற்றில் இருந்து ஓவியங்களை சட்டத்தோடு எடுக்க அவர்களால் முடியவில்லை. ஆதலால் ஓவியம் வரையப்பட்டிருந்த கேன்வாஸை கிழித்தும் சட்டங்களை உடைத்தும் திருடினார்கள். அந்த அருங்காட்சியகத்தில் பல பிரபல ஓவியங்கள் இருந்த போதிலும் இந்த 13 பொருட்களை மட்டும் அவர்கள் திருடியது இன்றும் மர்மமாக இருக்கிறது. இந்த திருடர்கள் மைய அட்லாண்டா அல்லது நியு இங்கிலாந்தின் குற்றவியல் கும்பலை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று எப்.பி.ஐ கருதுகிறது. 

இன்று வரை இந்த திருட்டிற்கு தொடர்புடைய யாரும் கைது செய்யப்படவில்லை. திருடு போன கலைப் பொருட்களும் கிடைக்கவில்லை. பாதுகாவலர் அபாத் முதற்கொண்டு பலரை எப்.பி.ஐ.  மேலாளர்கள் விசாரித்து இருக்கின்றனர். இந்த திருட்டிற்கு தொடர்பு உடைய தகவல்களை தெரிவித்தால் $1 கோடி வெகுமதி அளிப்பதாக அருங்காட்சியகம் அறிவித்திருக்கிறது. அத்தகைய தகவல்கள் எதுவும் உங்களுக்கு தெரிந்தால் அருங்காட்சியகத்தை தொடர்பு கொள்ளவும். 

கச்சிதமான ‘View of Auvers-sur-Oise’ ஓவிய திருட்டு 
உலகமே புது ஆயுரமாண்டின் தொடக்கத்தை டிசம்பர் 31, 1999ல் கொண்டாடி கொண்டிருந்த வேளையில், வான வேடிக்கைகளின் இரைச்சலுக்கு நடுவில் திரைப்பட பாணியில் ஆக்ஸ்போர்டின் Ashmolean அருங்காட்சியகத்தில் ஒரு திருட்டு நடந்தது. அடையாளம் தெரியாத ‘தொழில்முறை’ கொள்ளையர் ஒருவர் கூரை வழியே கயிற்றைக்  கொண்டு அருங்காட்சியகத்திற்குள் நுழைந்தார். புகை வெடிகுண்டை வெடிக்கச் செய்து,விசிறியை வைத்து புகையை அருங்காட்சியக அறையில் பரவ செய்தார். அங்கிருந்த பாதுகாப்பு கேமராக்களை புகை மறைத்துக் கொண்டது. அங்கிருந்த வான் கோ, பிக்காசோ, மனே (Manet), மோனெ (Monet) போன்ற பிரபல ஓவியர்களின் ஓவியங்கள் எதையும் கண்டுகொள்ளாமல், Paul Cézanne வரைந்த ‘View of Auvers-sur-Oise’ என்னும் ஓவியத்தை மட்டும் திருடினார் அந்த கொள்ளையர். £30 லட்சம் மதிப்புள்ள அந்த ஓவியத்தை 10 மணித் துளிகளுக்குள் திருடிவிட்டு மீண்டும் கூரையின் வழியே தப்பிவிட்டார். இன்று வரை அந்த ஓவியமோ, கொள்ளையரோ கிடைக்கவில்லை.
(ஆசுமோலியன் அருங்காட்சியகமும், திருடு போன ஓவியமும் - விக்கிப்பீடியா)

வின்சென்ட் வான் கோவின் இரண்டு ஓவியங்கள் 
மிகச் சிறந்த ஓவியர்களுள் ஒருவரான வின்சென்ட் வான் கோவின் ஓவியத்தை கலை ஆர்வலர்களும் கொள்ளையர்களும் விரும்புவதில் வியப்பு ஒன்றும் இல்லை. ஆம்ஸ்டர்டமில் இருக்கும் வான் கோ அருங்காட்சியகத்தின் தகவலின் படி, தன் வாழ் நாளில் வான் கோ மிகச் சில ஓவியங்களை மட்டுமே விற்று இருக்கிறார். இப்போது அவருடைய ஓவியங்கள் கோடிக் கணக்கான அமெரிக்க டாலர்களில் விற்கப்படுகிறது. 

2002ல் வான் கோ அருங்காட்சியகத்தின் பாதுகாப்பு பலமாக இருந்த போதிலும் கொள்ளையர்கள் சாளரத்தின் கண்ணாடியை உடைத்து கூரை வழியே அருங்காட்சியகத்திற்குள் நுழைந்தார்கள். அங்கிருந்த வான் கோவின் ஓவியங்களில் மிகச் சிறியதாக இருந்த ‘View of the Sea at Scheveningen’ மற்றும் ‘Congregation Leaving the Reformed Church at Nuenen’என்ற இரு ஓவியங்களை நான்கு மணித் துளிகளுக்குள் திருடிவிட்டு சென்றார்கள்.

வான் கோ - கலைத் திருட்டு
(வின்சென்ட் வான் கோ அருங்காட்சியகமும் திருடு போன ஓவியங்களும் - விக்கிப்பீடியா)

திருடிய ஓவியங்களை குற்றவியல் குடும்பத் (crime family) தலைவரான Raffaele Imperialeஎன்பவரிடம் €350,000க்கு 2003ஆம் ஆண்டு கொள்ளையர்கள் விற்று இருக்கிறார்கள். கொள்ளையர்களில் ஒருவரான ஆக்டேவ் டர்கம் 2003ல் கைது செய்யப்பட்டார். கொள்ளை நடந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்ட மரபணு மாதிரி டர்கமின் மரபணுவோடு ஒத்துப்போனது. அவருடைய கூட்டாளியாக இருந்தவர் Henk Bieslijn என்று தெரியவந்தது. இவர்களின் பகட்டான வாழ்க்கை முறையை பார்த்தே காவலர்கள் இவர்களை பின் தொடர்ந்து சென்று கைது செய்தனர். கைது செய்யப்பட்டு இருந்தாலும் ஓவியங்கள் இருந்த இடத்தை இவர்கள் காவலர்களிடம் தெரிவிக்கவில்லை.

கொள்ளை நடந்த பதிநான்கு ஆண்டுகளுக்கு பிறகு 2016ல் கோக்கைன் போதைப் பொருள் வழக்கு ஒன்றை விசாரித்து வந்த இத்தாலிய காவலர்கள் திருடு போன இரு ஓவியங்களை நேப்பிள்ஸ் நகரின் அருகே கண்டுபிடித்தார்கள். இரு ஓவியங்களும் பாதிப்புகள் ஏதும் இன்றி ஒரு பண்ணை வீட்டு கழிவறை சுவற்றின் பின்னால் இருந்தது. 

மூன்று மணித் துளி கொள்ளை – Kunsthal Museum, Rotterdam
அக்டோபர் 16, 2012ல் ஏழு ருமேனியர்கள் ராட்டர்டேம் நகரில் இருக்கும் Kunsthal அருங்காட்சியகத்தில் இருந்து ஏழு ஓவியங்களை கொள்ளையடித்தார்கள். அந்த ஏழு ஓவியங்கள் - மோனெவின் ‘Waterloo Bridge’ மற்றும் ‘Charing Cross Bridge’பிக்காசோவின் Tete d’Arlequin’, Gauguinவின்‘Femme devant une fenêtre ouverte’, Matisseசின்‘La Liseuse en Blanc et Jaune’, De Haanசின்autoprotrait மற்றும் Lucian Freudடின்‘Woman with Eyes Closed’ஒரு கோடியே 80 லட்சம் ஈரோ மதிப்புள்ள அந்த ஏழு ஓவியங்களை மூன்றே மணித் துளிகளில் கொள்ளையடித்தார்கள். கொள்ளையடித்த ஓவியங்களை தலையணைகளுக்குள் மறைத்து வைத்து ருமேனியாவிற்கு கடத்தினார்கள். 
(குன்சுதால் அருங்காட்சியகம் - விக்கிப்பீடியா)

திருடர்களில் ஒருவரான Radu Dogaruதலையணைகளை தன் தாயின் வீட்டிற்கு கொண்டுச் சென்றார். 2013ல் கொள்ளையர் ஒருவரின் முன்னாள் காதலி கொள்ளையைப் பற்றிய தகவலை காவல்துறையிடம் கூறினார். விசாரணை நடந்து கொண்டிருப்பதைக் கண்டு அஞ்சிய Dogaruவின் தாய் எல்லாம் ஓவியங்களையும் அடுப்பில் போட்டு எரித்துவிட்டார். இந்தக் கொள்ளை மிகவும் எளியதாக இருந்ததால், அருங்காட்சியகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலவீனமாக இருந்ததாக  அருங்காட்சியகத்தின் மீது வழக்குத் தொடரப் போவதாக Dogaru பெருமையடித்துக் கொண்டார். 

ஒரு கலைப் பொருள் திருடனின் ஒப்புதல் வாக்குமூலம். 
வரலாற்றில்Stéphane Breitwieser ஒரு பேர்போன கலைப் பொருள் திருடர். பிரெஞ்சுக்காரரான Breitwieserஓவியங்கள்அணிகலன்கள்சிலைகள் முதலிய 239 கலைப் பொருட்களை 1995ல் இருந்து 2001க்குள் கொள்ளையடித்தார். இந்தப் பொருட்களை பிரான்ஸ்சுவிச்சர்லாந்துநெதர்லாந்துபெல்ஜியம் மற்றும் ஆஸ்திரியா நாடுகளில் இருந்த 172 அருங்காட்சியகங்களில் இருந்து கொள்ளையடித்தார். இவருடைய அந்நாள் காதலி Anne-Catherine Kleinklaussகொள்ளையடிப்பதற்கு உதவியாக இருந்தார். Breitwieserகொள்ளையடிக்கும் போது யாராவது வருகிறார்களா என்று அவருடைய காதலி கண்காணிப்பார். 

மற்ற கொள்ளையர்களைப் போல் விற்பதற்காக திருடாமல்,தனக்கென்று சேகரிப்பதற்காகவே கலைப் பொருட்களை திருடினார் Breitwieser கொள்ளையடித்த பொருட்களை Mulhouse என்னும் பிரெஞ்சு நகரில் இருந்த தன் தாயான Mireille Breitwieserரின் வீட்டில் சேர்த்து வைத்தார். 1997ஆம் ஆண்டு சுவிச்சர்லாந்தில் இருந்த ஒரு தனியார் சேகரிப்பு காட்சியகத்தில் இருந்து ஒரு ஓவியத்தை திருடும் போது Breitwieserரும் அவர் காதலியும் கைதானார்கள். சுவிச்சர்லாந்து அவருக்கு எட்டு மாத சிறை தண்டனையும் 2000ஆம் ஆண்டு வரை சுவிச்சர்லாந்திற்குள் வரத் தடையும் விதித்தது. 

2001ல் சில நூற்றாண்டுகள் பழமையான ஊதுகுழல் ஒன்றை Lucerneனில் இருந்த ரிச்சர்டு வாக்னர் அருங்காட்சியகத்தில் இருந்து திருடினார் Breitwieser. திருடிய இரண்டு நாட்களுக்குப் பிறகு அதே அருங்காட்சியகத்திற்கு மீண்டும் வந்த போதுபத்திரிகையாளரானErich Eisner இவரை அடையாளம் கண்டு கொண்டு, அருங்காட்சியக பாதுகாவலரிடம் தெரிவித்தார். முடிவாக காவல்துறையினர் Breitwieserரைகைது செய்தனர். சுவிஸ் காவலர்கள் Breitwieserரின் தாயார் வீட்டை சோதனை இடுவதற்கான அனுமதியை வாங்க 19 நாட்களாகியது. அதற்குள் அவரின் தாயார் பல ஓவியங்களை வெட்டி துண்டாக்கினார். பிற கலைப் பொருட்களை Rhone-Rhine கால்வாய்க்குள் எறிந்துவிட்டார். எப்படியோ அவரிடம் இருந்து 110 கலைப் பொருட்களை கைப்பற்றினார்கள். 

இந்தக் குற்றங்களுக்காக Breitwieser26 மாதங்கள் மட்டுமே சிறையில் இருந்தார். அவரின் தாயார் 18 மாதங்களும்முன்னாள் காதலி 6 மாதங்கள் மட்டுமே சிறையில் இருந்தனர். 2011ல் Breitwieserதிருடிய மேலும் 30 கலைப் பொருட்களை காவலர்கள் கண்டெடுத்தனர். பின்பு  2013ல் Breitwieserமூன்று ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார்.  தான் கொள்ளையடித்த அனுபவங்களை சுயசரிதமாக ‘Confessions d’un Voleur d’art’ (Confessions of an Art Thief)என்னும் பெயரில் எழுதினார் Breitwieser

மண்ச் அருங்காட்சியக கொள்ளை
நார்வே நாட்டின் சிறந்த ஓவியர் எட்வர்ட் மண்ச் (Edvard Munch). இவரின் ‘The Scream’ ஓவியம் உலகப் புகழ் பெற்றது. ‘The Scream’ஓவியத்தை நான்கு பதிப்புகளாக வரைந்திருக்கிறார் மண்ச். அவற்றில் இரண்டை ஓவியங்களாகவும் மற்ற இரண்டை pastel எனப்படும் வண்ணக் குச்சிகளை வைத்தும் வரைதிருக்கிறார். நார்வேயின் தலைநகரான ஓஸ்லோ நகரில் இருக்கும் தேசிய அருங்காட்சியகத்தில் (National Gallery) இருந்தும்,மண்ச் (Munch Museum)அருங்காட்சியகத்தில் இருந்தும் ‘The Scream’ஓவியம் இரண்டு முறை திருடு போய் இருக்கிறது
மண்ச் - கலைத் திருட்டு
(மண்ச் அருங்காட்சியகமும் திருடு போன ஓவியமும் - விக்கிப்பீடியா)

1988ல் நார்வேயின் கால்பந்து விளையாட்டு கழகமான Valerengaவை சேர்ந்த தொழில்முறை கால்பந்து விளையாட்டு வீரரான பால் எங்கர் (Paal Enger) மண்சின் ‘The Vampire’ ஓவியத்தை திருடினார். எங்கரின் பகட்டான வாழ்க்கை முறை அவரின் சக விளையாட்டு வீரர்களும் காவலர்களுமான இருவருக்கு ஐயத்தை ஏற்படுத்தியது. இரு காவலர்களும் எங்கர் ஒரு திருடர் என்பதை கண்டுபிடித்தார்கள். அதன் பின் எங்கரின் வீட்டிலிருந்து ‘The Vampire’ ஓவியத்தை காவலர்கள் கைப்பற்றினார்கள். 1994 வரை சிறையில் இருந்தார் எங்கர். 

சிறையில் இருந்து வெளி வந்த எங்கரை ‘The Scream’ ஓவியத்தை கொள்ளை அடித்து வரும் பணியில் நியமித்தார் ஒரு மர்ம மனிதர். எங்கரும் இன்னும் மூன்று கொள்ளையர்களும் சேர்ந்து நார்வேயின் தேசிய அருங்காட்சியகத்தில் இருந்து ‘The Scream’ஓவியத்தை திருடினார்கள். அருங்காட்சியகத்தில் பாதுகாப்பு கெடுபிடிகள் எதுவும் இல்லாததால் எளிதாக கொள்ளையடித்ததோடு,‘மட்டமான பாதுகாப்புக்கு ஆயிரம் நன்றிகள்என்று நக்கலாக ஓவியங்கள் இருந்த சுவற்றில் எழுதிவிட்டு சென்றார் எங்கர். 

எங்கர் தனக்கு குழந்தை பிறந்த செய்தியை செய்தித்தாளில் ‘born with a scream’ என்று விளம்பரப்படுத்தி பெருமையடித்துக் கொண்டார். இதனால் எச்சரிக்கை அடைந்த காவல்துறைதிருடு போன கலைப் பொருட்களை மீட்கும் நிபுணரும் பிரிட்டிஷ்காரருமான டோனி ரஸ்ஸலின் உதவியை நாடியது. ஒரு sting operation மூலம் ஓவியத்திற்கு மீட்புப் பணத்தை (ransom) கொடுப்பது போல் எங்கரிடம் பேரம் பேசி அவரை கைது செய்தார்கள். இந்த முறை எங்கர் ஆறரை ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். 

ஆகஸ்ட் 22, 2004ல் ‘The Scream’ ஓவியத்தின் மற்றொரு பதிப்பு மண்ச் அருங்காட்சியகத்தில் இருந்து திருடப்பட்டது. தலையை மறைக்கும் உடைகளை அணிந்து வந்த இரண்டு திருடர்கள் அருங்காட்சியக பணியாளர்களையும் பார்வையாளர்களையும் துப்பாக்கியை காட்டி மிரட்டி ‘The Scream’ மற்றும் ‘Madonna’ஓவியங்களை திருடிக் கொண்டு காரில் தப்பிச் சென்றனர். அருங்காட்சியக பாதுகாப்பு கேமராக்களில் இந்த திருட்டு பதிவு செய்யப்பட்டிருந்தது. நார்வேயில் அதே ஆண்டு ஏப்ரல் ஐந்தாம் தேதி இன்னொரு கொள்ளை நடந்தது. எனவேர்,இந்த இரண்டு கொள்ளைகளுக்கும் தொடர்பு இருக்கிறதா என்று காவல்துறை விசாரித்தது. அவர்களுக்கு எங்கர் மீதும் ஐயம் ஏற்பட்டது. 
இரண்டு வருடங்களுக்கு பிறகு 2006ல் இரண்டு ஓவியங்களும் சிறிய பாதிப்புகளோடு கண்டுபிடிக்கப்பட்டன. காவல்துறை மூன்று கொள்ளையர்களை கைது செய்தது. கொள்ளையர்களுக்கு நான்கில் இருந்து ஏழு ஆண்டுகள்வரை சிறை தண்டனை கொடுக்கப்பட்டது. 

வான் கோவின் பாப்பி மலர்கள்
வான் கோவின் $5 கோடி மதிப்புள்ள பாப்பி மலர்கள் (Poppy Flowers) ஓவியம் எகிப்தின் கெய்ரோ நகரில் இருக்கும் Mohamed Mahmoud Khalil அருங்காட்சியகத்தில் இருந்து இரண்டு முறை திருடப்பட்டு இருக்கிறது. முதல் முறையாக ஜூன் 4, 1977ல் திருடப்பட்ட இந்த ஓவியம் பத்து ஆண்டுகளுக்கு பின் குவைத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஓவியம் மீண்டும் 2010ல் திருடப்பட்டது. அருங்காட்சியகத்தின் பலவீனமான பாதுகாப்பு ஏற்பாடுகளே இந்த திருட்டிற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இந்த ஓவியத்தைப் பற்றிய தகவல் தெரிவிப்பவர்களுக்கு எகிப்தின் செல்வந்தரான Naguib Sawiris $175,000 வெகுமதி அளிக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். இந்த திருட்டுகளைப் பற்றிய மேற்படியான எந்த தகவல்களும் அருங்காட்சியகத்தில் இருந்து கிடைக்கவில்லை.
வான் கோ - கலைத் திருட்டு
(எகிப்து அருங்காட்சியகமும் திருடு போன ஓவியமும் - விக்கிப்பீடியா)




Comments