- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் (ISS) தங்கி பல அறிவியல் பரிசோதனைகளை விண்வெளி வீரர்கள் செய்து கொண்டு இருக்கிறார்கள். ISSல் பல மாதங்கள் தங்குவதன் மூலம் மனித உடம்பில் விண்வெளி எவ்வித மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதை புரிந்து கொள்ளலாம். இத்தகைய ஆராய்ச்சிகள் நமது எதிர்கால நீண்ட விண்வெளி பயணங்களுக்கு ஏற்ற விண்கலங்கள் மற்றும் பயணத் திட்டங்களை உருவாக்குவதற்கு உதவியாக இருக்கும். ஆனால், அதிக நாட்கள் விண்வெளியில் தங்கினால் நமது மூளை பாதிக்கப்படுகிறது. மூளையை பாதிக்கும் விண்வெளி பற்றி பெல்ஜியம், ஜெர்மனி மற்றும் ரஷ்யாவை சேர்ந்த விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து இருக்கிறார்கள்.
![]() |
(மூளையை பாதிக்கும் விண்வெளி. பட உதவி: VSRao & FelixMittermeier, Pixabay) |
அந்த விஞ்ஞானிகள் ISSல் ஆறு மாதங்கள் தங்கி இருந்த பத்து ரஷ்ய விண்வெளி வீரர்களின் மூளைகளை ஆராய்ந்து இருக்கிறார்கள். விண்வெளி நிலையத்திற்கு போவதற்கு முன்பும், பூமிக்கு திரும்பிய பின்பும் அவர்களின் மூளைகளை MRI வருடியை (scanner) வைத்து பரிசோதித்து இருக்கிறார்கள். அந்த பரிசோதனையில் ISSல் நீண்ட காலம் தங்கி இருந்ததால் பெருமூளைப் புறணி (cerebral cortex) மற்றும் சிறுமூளை பகுதிகளில் இருக்கும் சாம்பல் பொருளின் (grey matter) அளவு குறைந்து இருப்பதை கண்டுபிடித்து இருக்கிறார்கள். பூமிக்கு திரும்பி வந்து ஏழு மாதங்களுக்கு பின் ஏழு விண்வெளி வீரர்களின் மூளைகளை மீண்டும் பரிசோதித்து இருக்கிறார்கள். அப்போது சாம்பல் பொருளின் அளவு அதன் இயல்பு நிலைக்கு வந்துவிட்டதை கண்டறிந்து இருக்கிறார்கள்.
விண்வெளியில் நீண்ட நாள் தங்கியதால் மூளையின் வெள்ளைப் பொருளின் (white matter) அளவும் குறைந்து இருந்ததை கண்டுபிடித்து இருக்கிறார்கள். ஆனால் பூமிக்கு திரும்பி வந்து ஏழு மாதங்களுக்கு பின்பும் புறணி மற்றும் சிறுமூளை பகுதிகளில் வெள்ளைப் பொருளின் அளவு இயல்பு நிலையை அடையவில்லை. கடைசியாக, மூளை தண்டுவட திரவ (cerebrospinal fluid, CSF) அளவையும் பரிசோதித்து இருக்கிறார்கள். வழக்கமாக மூளைக்கு மேல் இருக்கும் CSF திரவ பகுதியின் இடம் சுருங்கி இருந்ததையும், மூளையை சுற்றி இருக்கும் CSF திரவ பகுதியின் இடம் விரிவடைந்து இருந்ததையும் கண்டுபிடித்து இருக்கிறார்கள். பூமியை அடைந்து ஏழு மாதங்களுக்கு பின் செய்த பரிசோதனையில், மூளையை சுற்றி விரிவடைந்த CSF திரவ பகுதிகள் அப்போதும் விரிவடைந்த நிலையிலேயே இருந்ததை கண்டறிந்து இருக்கிறார்கள்.
![]() |
(பன்னாட்டு விண்வெளி நிலையம் - நாசா, விக்கிமீடியா) |
மூளையிலும் CSF திரவத்திலும் ஏற்பட்டு இருக்கும் இதே போன்ற மாற்றங்களை அமெரிக்க விண்வெளி வீரர்களிடமும் ஒரு ஆண்டுக்கு முன்பு வேறு ஒரு விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்தது. அந்த ஆராய்ச்சியில் ISSல் சராசரியாக 164.8 நாட்கள் தங்கி இருந்த பதினெட்டு அமெரிக்க விண்வெளி வீரர்களின் மூளைகளை பரிசோதனை செய்தார்கள். அந்த பரிசோதனையில் விண்வெளி வீரர்களின் மூளைகள் மேல் நோக்கி சிறிது நகர்ந்து இருந்ததையும், CSF திரவ பகுதிகள் குறுகி இருந்ததையும் கண்டுபிடித்தார்கள்.
Comments
Post a Comment