பூஜ்யத்தை புரிந்து கொள்ளும் தேனீக்கள்

ஆஸ்திரேலியாவின் RMIT பல்கலைகழகம் மற்றும் பிரான்சின் Toulouse பல்கலைகழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் தேனீக்களால் பூஜ்யம் என்ற கருத்தை புரிந்து கொள்ள முடியும் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். மனிதர்களைத் தவிர, செம்முகக் (rhesus) குரங்கிற்கும் ஆப்பிரிக்க சாம்பல் கிளிகளுக்கும்  பூஜ்யத்தை புரிந்து கொள்ளக்கூடிய அறிவு இருப்பதாக ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரோமானியர்களைப் போன்ற சில பண்டைய மனித நாகரிகங்கள் கூட பூஜ்யத்தைப் பற்றியோ அதன் முக்கியத்துவத்தைப் பற்றியோ அறிந்திருக்கவில்லை.

தேனீக்களின் மூளையில் 960,000 நரம்பணுக்கள் இருக்கும். தேனை சேகரித்து பாதுகாப்பதுகூடுகளை கட்டுவது மற்றும் கூட்டாக வாழ்வது என்று பல சிக்கலான வேலைகளை செய்யக்கூடிய திறன் படைத்தவை தேனீக்கள். இதற்கு முன்பு, தேனீக்களுக்கு எண்ணும் திறமை மற்றும் நான்கு பொருட்கள் வரை வேறுபடுத்தி பார்க்கும் திறமை இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். தேனீக்களால் பூஜ்யம் என்ற கருத்தை புரிந்துகொள்ள முடியும் என்ற புதிய கண்டுபிடிப்பு விஞ்ஞானிகளையும் மற்றவர்களையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. 

(தேனீக்கள். பட உதவி: Pixabay)

இந்த ஆராய்ச்சியில்இருப்பதிலேயே சிறிய எண்களை தேர்ந்தெடுக்க தேனீக்களை பழக்கினார்கள் விஞ்ஞானிகள். அப்படிசரியாகதேர்ந்தெடுத்தால், தேனீக்களுக்கு பரிசாக இனிப்பு கலந்த தண்ணீரை கொடுத்தார்கள். விஞ்ஞானிகள் பரிசோதனைக்காக இரண்டு படங்களை காட்சிக்கு வைத்தார்கள். வெண்ணிறத்தை பின்புலமாக கொண்ட ஒவ்வொரு படத்திலும் ஒன்று முதல் நான்கு கருப்பு உருவங்கள் இருக்கும். தேனீக்கள் எந்தப் படத்தில் குறைந்த எண்ணிக்கையில் கருப்பு உருவங்கள் இருக்கிறது என்று கணக்கிட்டு அதை நோக்கி பறக்க வேண்டும். அப்படி செய்தால் அவற்றிற்கு இனிப்பு தண்ணீர் கிடைக்கும். தேனீக்கள், தவறாக அதிக எண்ணிக்கையில் கருப்பு உருவங்கள் இருக்கும் படத்தை தேர்ந்தெடுத்தால், அவற்றிற்கு கசப்பான quinine என்னும் மலேரியாவிற்கு கொடுக்கப்படும் மருந்து கலந்த தண்ணீரை கொடுப்பார்கள். இவ்வாறு பயிற்சி பெறும் தேனீக்கள், இனிப்பு தண்ணீருக்காக குறைந்த எண்ணிக்கையில் கருப்பு உருவங்கள் இருக்கும் படத்தையே தேர்ந்தெடுக்கும். 

இந்த பயிற்சி முடிந்த பின்கருப்பு உருவங்கள் இருக்கும் படம் ஒன்றையும்,கருப்பு உருவங்கள் இல்லாத வெற்று வெள்ளை பின்புலம் மட்டும் இருக்கும் படத்தையும் காட்சிக்கு வைத்தார்கள் விஞ்ஞானிகள். வியக்க வைக்கும் வகையில்63% முறை தேனீக்கள் வெற்று படத்தை தேர்தெடுத்தன. இதன் மூலம் தேனீக்களால் வெற்றுத் தன்மையை, அதாவது பூஜ்யத்தை புரிந்து கொள்ள முடியும் என்பது தெரிகிறது. அதுமட்டும் இல்லாமல்கருப்பு உருவங்களை விட ‘பூஜ்யம்’ ஒரு குறைந்த எண்ணிக்கை என்பதை தேனீக்கள் புரிந்து கொண்டுள்ளன என்பதும் தெரிகிறது. 

தேனீக்கள் பூஜ்யத்தை புரிந்துகொண்டுதான் தேர்ந்தெடுத்தனவா அல்லது சும்மாவாக வெற்று படத்தை தேர்ந்தெடுத்தனவா என்பதை உறுதிபடுத்த மேலும் ஒரு பரிசோதனையை செய்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள். இந்த பரிசோதனையில் பெரிய எண்களை தேர்ந்தெடுக்க தேனீக்களை பழக்கினார்கள். இந்த முறை, அதிக கருப்பு உருவங்கள் இருக்கும் படத்தை தேர்ந்தெடுத்தால் தேனீக்களுக்கு இனிப்பு தண்ணீர் கொடுத்தார்கள். இந்த பயிற்சி முடிந்ததும்கருப்பு உருவங்கள் இருக்கும் ஒரு படத்தையும், வெற்று படம் ஒன்றையும் காட்சிக்கு வைத்தார்கள். தேனீக்கள் கருப்பு உருவங்கள் இருக்கும் படத்தை தேர்ந்தெடுத்து விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தின. இந்த பரிசோதனை தேனீக்களால் பூஜ்யத்தை புரிந்து கொள்ள முடியும் என்பதை உறுதி படுத்துகிறது. 

இந்த கண்டுபிடிப்பு செயற்கை அறிவுத்திறனை (Artificial Intelligence) வடிவமைக்கவும், பயிற்சி அளிக்கவும் உதவும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.



Comments