- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
ரத்த ஓட்டத்தில் இருந்து கிருமிகளோ, நஞ்சு பொருட்களோ மூளைக்குள் நுழைந்துவிடாமல் இருக்க ‘ரத்த-மூளை தடுப்பு’ (blood-brain barrier) என்ற பாதுகாப்பு அமைப்பை மூளை வைத்திருக்கிறது. தண்ணீர்,அமினோ அமிலம்,குளுக்கோசு மற்றும் கொழுமியம் (lipid) போன்ற மிகத் தேவையான பொருட்களை மட்டுமே மூளை தனக்குள் எடுத்துக்கொள்ளும். மனிதர்கள் மற்றும் விலங்குகளின் இரையகக் குடற்பாதையில் (gastrointestinal tract) பாக்டீரியாக்கள் வாழ்வது பற்றி நாம் அறிந்திருக்கின்றோம். இயல்பான நிலையில், மூளையில் பாக்டீரியாக்கள் வாழாது என்று தான் இது வரை நாம் கருதி வந்தோம். ஆனால்,சில பாக்டீரியாக்களும் வைரசுகளும் மூளையை தாக்கி,உயிரை பறிக்ககூடிய நோய்களை உண்டாக்ககூடியன. இதற்கு முன் 2013ல் எச்.ஐ.வி மற்றும் பிற நோய்கள் தாக்கிய மூளைகளில் பாக்டீரியாக்களை சேர்ந்த ஆர்.என்.ஏ. (RNA) இருப்பதை கண்டுபிடித்திருந்தார்கள். அதாவது பாக்டீரியாக்களின் ஆர்.என்.ஏ.வை கண்டுபிடித்ததன் மூலம் அந்த மூளைகளில் பாக்டீரியாக்கள் இருந்ததை உறுதி செய்து இருந்தார்கள். புதிய தொடக்க கால ஆராய்ச்சியில் (pilot study) இயல்பான மூளைகளிலும், பிளவுபட்ட மனநோய் (schizophrenia) இருந்தவர்களின் மூளைகளிலும் பாக்டீரியாக்கள் இருந்ததை கண்டுபிடித்திருக்கிறார்கள்.
![]() |
(மூளையில் பாக்டீரியா?! பட உதவி: Geralt, Pixabay) |
அமெரிக்காவின் பர்மிங்காம் நகரில் இருக்கும் அலபாமா பல்கலைகழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் 2018ஆம் ஆண்டின் நரம்பியல் மாநாட்டில் இந்த கண்டுபிடிப்பை வழங்கியிருக்கிறார்கள். மதிப்பு மிக்க இந்த நரம்பியல் மாநாட்டை அமெரிக்காவின் நரம்பியல் கழகம் (Society for Neuroscience) ஆண்டுதோரும் நடத்திவருகிறது. இயல்பு நிலையில் இறந்தவர்களின் மூளைகளில் இருந்தும், பிளவுபட்ட மனநோய் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் மூளைகளில் இருந்தும் சில பகுதிகளை எடுத்து எதிர்மின்னி நுண்நோக்கி (electron microscope) மூலம் பரிசோதனை நடத்தினார்கள். மூளை திசுக்களில் கோல் வடிவ (rod-shaped) பாக்டீரியாக்கள் இருந்தது பரிசோதனையில் தெரியவந்தது. இயல்பு நிலை மற்றும் நோய் பாதிக்கப்பட்ட மூளைகளிலும் பாக்டீரியாக்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது. பாக்டீரியாக்களின் நுண் உறுப்புகளான கருவின் கரு, இரைபோசோம் மற்றும் புன்வெற்றிடம் போன்றவற்றை நுண்நோக்கியின் மூலம் எடுக்கப்பட்ட படங்களில் தெளிவாக பார்த்திருக்கிறார்கள். இந்த அருமையான கண்டுபிடிப்பு அறிவியல் ஆர்வலர்களுக்கு மிகுந்த ஊக்கத்தை உண்டுபண்ணி இருக்கிறது.
நாம் இறந்த உடன், குடலில் இருக்கும் பாக்டீரியாக்கள் உடலின் மற்ற பகுதிகளுக்கு பரவ வாய்ப்பு இருக்கிறது. மூளையில் கண்டுபிடிக்கப்பட்ட பாக்டீரியாக்கள், இறந்த பிறகு குடலில் இருந்து பரவியவை அல்ல என்பதை நிரூபிக்க விஞ்ஞானிகள் விரும்பினார்கள். அதற்காக எலிகளின் மூளைகளை எடுத்து உடனடியாக நுண்நோக்கியின் மூலம் ஆராய்ந்தார்கள். எலிகளின் மூளைகளிலும் பாக்டீரியாக்கள் இருந்தை உறுதி செய்தார்கள். இந்த கண்டுபிடிப்புகளை மேலும் உறுதி செய்ய கிருமிகள் இல்லாத சூழ்நிலையில் வளர்க்கப்பட்ட எலிகளின் மூளைகளை எடுத்து ஆராய்ந்தார்கள். அந்த கிருமிகள் இல்லாத (germ-free) எலிகளின் மூளைகளில் பாக்டீரியாக்கள் இல்லை என்பதை கண்டுபிடித்தார்கள். இந்த ஆராய்ச்சியின் மூலம் குடலில் இருப்பது போல் மூளையிலும் பாக்டீரியாக்கள் வாழ்வது தெரிகிறது. குடலில் பொதுவாக Firmicutes, Proteobacteria and Bacteroidetes தொகுதிகளை (phylum) சேர்ந்த பாக்டீரியாக்கள் வாழும். மூளை திசுக்களின் மாதிரிகளில் இருந்து ஆர்.என்.ஏக்களை பரிசோதித்த (RNA sequencing) போது குடலில் வாழும் பாக்டீரியா வகைகளே மூளையிலும் இருப்பது தெரியவந்திருக்கிறது. ஆனாலும், மூளைக்குள் பாக்டீரியாக்கள் எப்படி நுழைகிறது என்பதை விஞ்ஞானிகள் இனி ஆராய வேண்டும்.
![]() |
(மனித மூளைகள். பட உதவி: Prylarer, Pixabay) |
இந்த வியக்க வைக்கும் ஆராய்ச்சியின் பின்னணியில் நடந்த சுவையார்வமான நிகழ்வை பிரபல ‘Science’ அறிவியல் பத்திரிக்கை வெளியிட்டு இருக்கிறது. இந்த ஆராய்ச்சியை முன் நின்று நடத்திய கோர்ட்னி வாக்கர் (Courtney Walker) ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே மூளையின் மாதிரிகளில் கோல் வடிவ பொருட்கள் இருப்பதை கண்டுபிடித்தார். தனது தலைவரான நரம்பியல் வல்லுநர் ரோசலிண்டா ராபர்ட்சிடம் (Rosalinda Roberts) தனது கண்டுபிடிப்பை பற்றித் தெரிவித்தார் வாக்கர். ஆனால், அந்த கோல் வடிவ பொருட்கள் பாக்டீரியாக்கள் என்று ராபர்ட்சு நம்பவில்லை. ஆனால்,வாக்கர் ஆர்வம் குன்றாமல் தனது ஆராய்ச்சி தொடர்ந்து செய்து கொண்டிருந்தார். இறுதியில், பாக்டீரியா வல்லுநர் ஒருவர் இவர்கள் மூளை திசுக்களில் கண்டுபிடித்தது பாக்டீரியாக்கள் தான் என்பதை உறுதிபடுத்தினார்.
Comments
Post a Comment