புத்திசாலி ஆக்டோபஸ்

ஆக்டோபஸ் தலைக்காலி (cephalopod) வகுப்பைச் சார்ந்த ஒரு கடல் வாழ் உயிரினம்.ஆக்டோபஸ் எலும்புகள் இல்லாத மென்மையான உடலைக் கொண்டது. அதனால் இவற்றினால் சிறு துளைகளின் வழியே நகர்ந்து செல்ல முடியும். ஆக்டோபஸிற்கு எட்டு கைகள் இருக்கும். மூன்றில் இரண்டு பங்கு நரம்பணுக்கள் இவற்றின் கைகளில் தான் இருக்கும். அதனால் இவற்றின் கைகள் தனியாக முடிவெடுத்து செயல்பட முடியும். 

லண்டன் செயிண்ட் ஜார்ஜ் பல்கலைகழகத்தின் விஞ்ஞானியான தெரேசா ஹேக் என்பவர் தனியாக பிரிக்கப்பட்ட ஆக்டோபஸ்களின் கைகள் தனியாக எதிர்வினையாற்றுவதை நிரூபித்துள்ளார். நீட்டி வைக்கப்பட்ட ஆக்டோபஸ்களின் கைகள் எப்படி கிள்ளும் போது இழுத்துக்கொண்டன என்பதை பதிவு செய்துள்ளார். மேலும் கைகளின் மீது அசிடிக் அமிலம் அல்லது தண்ணீரை ஊற்றும் போது, கைகள் எப்படி சுருங்கி கொண்டன என்பதையும் பதிவு செய்திருக்கிறார். இதன் மூலம் ஆக்டோபஸ்களின் நரம்பியல் மண்டலம் நன்கு முன்னேறிய அமைப்பாக இருக்கிறது என்று தெரிகிறது. 

ஆக்டோபஸ்கள் மனிதர்களை அடையாளம் கண்டுகொள்ளும். இது அவற்றின் புலனறிவுத் (cognitive) திறனுக்கு சான்றாகும். ரொனால்ட் சி ஆண்டெர்சனின் ஆராய்ச்சி குழுவினர் ஆக்டோபஸ்களின் மனிதர்களை அடையாளம் கண்டுகொள்ளும் திறமையை ஒரு பரிசோதனையின் மூலம் நிரூபித்திருக்கிறார்கள். அந்த பரிசோதனையில், ஒருவர் சில ஆக்டோபஸ்களுக்கு தினமும் இரு முறை ஹெர்ரிங் (herring) வகை மீன்களை உண்ணக் கொடுத்தார். அது போல் தொடர்ந்து ஐந்து நாட்கள் ஆக்டோபஸ்களுக்கு உணவளித்தார். இன்னொரு மனிதர் அதே ஆக்டோபஸ்களை கடினமான முடிகளுடைய (bristles) குச்சியை வைத்து 30 விநாடிகளுக்கு தொட்டு எரிச்சலூட்டினார். பரிசோதனை காலங்கள் முடிந்ததும் ஆக்டோபஸ்கள் இருக்கும் தண்ணீர் தொட்டிகளுக்கு அருகே இருவரும் வெவ்வேறு நேரங்களில் போய் நின்றார்கள். உணவளித்தவர் வந்த போது ஆக்டோபஸ்கள் அவரை நோக்கி நகர்ந்து வந்தன. அதோடு அவரை நோக்கி தங்களின் கைகளை நீட்டின. குச்சியால் ஆக்டோபஸ்களை தொட்டு எரிச்சலூட்டியவர் தொட்டியின் அருகே வந்த போது,ஆக்டோபஸ்கள் அவருக்கு எதிர்புறமாக நீந்திச் சென்றன. இதிலிருந்து ஆக்டோபஸ்களின் மனிதர்களை அடையாளம் கொள்ளும் திறன் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. 

தப்பிக்கும் திறன் 
ஆக்டோபஸ்கள் அடைபட்டிருக்கும் இடங்களிலிருந்து தப்பி செல்வதில் திறமைசாலிகள். அவை நீர்வாழ் உயிரனங்கள் காட்சிசாலைகளில் இருந்து பல முறை தப்பி சென்று இருக்கின்றன. அதுவும்மனிதர்கள் இல்லாத நேரமாக கவனித்து தப்பி இருக்கின்றன. அவற்றிற்கு தங்கள் சுற்றுச்சூழலைப் பற்றிய விழிப்புணர்வு இருக்கும். எந்த சூழலுக்கும் ஏற்றவாரு மாற்றிக்கொள்ளும் திறமை இருக்கும். என்ன இருந்தாலும் சிறைக்குள் அடைப்பட எந்த உயிரனமும் விரும்புவதில்லை. ஆக்டோபஸ்கள் தங்களின் மென்மையான உடலை கொண்டு சிறு துளைகள் அல்லது குழாய்களின் வழியே எளிதாக தப்பிச் சென்றுவிடும். 
ஒரு இன்ச் துளை வழியே தப்பிக்கும் ஆக்டோபஸ்

ஆக்டோபஸ்கள் கடலில் எதிரி விலங்குகளிடம் இருந்து தப்பித்துக் கொள்ள அடர்த்தியான மை திரவத்தை வெளியேற்றும். இவற்றின் செவுள்களின் இடையே மை இருக்கும் பைகள் இருக்கும். அதிலிருந்து மை திரவத்தை வெளியேற்றி புகைப் படலம் போல் உருவாக்கும். அந்த மை திரவத்தில் மெலனினும் (melanin) தைரோசினேஸ் (tyrosinase) நொதியும் (enzyme) இருக்கும். தைரோசினேஸ் மெலனின் உற்பத்தியை பராமரிக்கும் நொதியாகும். தைரோசினேஸ் எதிரி விலங்குகளின் கண்களை எரிச்சலூட்டும் தன்மை உடையவை.

ஆக்டோபசின் மை திரவம்

ஆக்டோபஸ்கள் சிக்கலான சூழ்நிலைகளை புத்திசாலித்தனமாக சமாளிக்கும் திறமை உடையவை. அவற்றை ஒரு குடுவைக்குள் அடைத்து வைத்தால்மூடியை உள்ளே இருந்தே திறந்து வெளியே வந்துவிடும். 

மூடிய குடுவையில் இருந்து தப்பிக்கும் ஆக்டோபஸ்

உருமறைப்பு (camouflage) திறன்
ஆக்டோபஸ்கள் உருமறைப்பு (camouflage) வித்தையில் தலைசிறந்தவை. எதிரி விலங்குகளிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ளஆக்டோபஸ்கள் தங்கள் தோலின் நிறம் மற்றும் அமைப்பை மாற்றிக்கொள்ளும். ஆக்டோபஸ்களின் தோலில் நிறத்தை மாற்றிக் கொள்ளும் அணுக்கள் (chromatophores) இருக்கும். இந்த அணுக்கள் ஒளியையும் பிரதிபலிக்கும் தன்மை உடையவை. இதன் மூலம் ஆக்டோபஸ்கள் சுற்றுச் சூழலுக்கு ஏற்றவாரு நிறத்தை மாற்றிக்கொள்ளும். 


மிமிக் ஆக்டோபஸ் (‘mimic octopus’ (Thaumoctopus mimicus)) என்னும் வியக்கவைக்கும் ஆக்டோபஸ் ஒன்று இருக்கிறது. இது நிறம் மற்றும் தன் வடிவத்தையும் மாற்றிக் கொள்ளும். இது தட்டையாக இருக்கும் flounder என்னும் மீன்சிங்க மீன் (lion fish) மற்றும் கடல் பாம்பு போன்று தன் வடிவத்தை மாற்றிக்கொள்ளும். இது வரை இந்த ஆக்டோபஸ் 15 கடல் உயிரனங்களைப் போல் உருமாறி இருப்பதை ஆவணப்படுத்திருக்கிறார்கள். 


ஆக்டோபஸ்கள் உலகில் இருக்கும் புத்திசாலியான விலங்குகளில் ஒன்றாகும். இவை சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளும் திறன்கற்றுக்கொள்ளும் திறன் மற்றும் உயிர் பிழைக்கும் திறன் கொண்ட சிறந்த உயிரினமாகும். ஆனால் இவற்றின் வாழ் நாட்கள் குறைவானது. இனத்தை பொறுத்து ஆறு மாதங்கள் முதல் ஐந்து வருடங்கள் வரை உயிர் வாழும். 

Comments