- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
மிக பிரபலமான ரோமானிய ஆட்சியாளரான, ஜூலியஸ் சீசரின் உயிரோட்டமான முப்பரிமாண (3D) தலையின் மாதிரியை நெதர்லாந்தின் லைடன் நகரில் இருக்கும் தொல்லியல் அருங்காட்சியகம் (The National Museum of Antiquities, Leiden) வெளியிட்டிருக்கிறது. தொல்லியலாளரான (archaeologist) Tom Buijtendorp சீசர் பற்றி ‘Caesar in de Lage Landen’ (Caesar in the Low Countries) என்னும் நூலை எழுதி இருக்கிறார். தனது நூலை வெளியிடும் போது சீசர் தலையின் முப்பரிமாண மாதிரியை உருவாக்கி, காட்சிப்படுத்தலாம் என்று திட்டம் இட்டார்.
![]() |
(ஜூலியஸ் சீசரின் முப்பரிமாண தலை (நடு படம்). மற்ற இரண்டும் சீசரின் பளிங்கு தலைகள்) |
அந்த திட்டத்தின் படி, ரோமானிய ஆட்சியாளரின் முப்பரிமாண மறுகட்டமைப்பை (3D reconstruction) தொல்லியலாளரும், மானுடவியலாளருமான (anthropologist) Maja d’Hollosy உருவாக்கி இருக்கிறார். தொல்பொருள் ஆராய்ச்சி இடங்களில் இருந்து தோண்டி எடுக்கப்படும் மனித எலும்புக்கூட்டு எலும்புகளை பற்றி ஆராய்ச்சி செய்பவர் d’Hollosy. மண்டை ஓட்டு எலும்புகளை வைத்து முகங்களை மறுகட்டமைப்பு செய்வதில் வல்லுநர் இவர்.
சீசரின் முப்பரிமாண மாதிரியை உருவாக்குவதற்கு சீசரின் இரண்டு பளிங்குத் தலை சிலைகள் பயன்படுத்தப்பட்டன. ஒன்று லைடன் தொல்லியல் அருங்காட்சியகத்தில் இருந்தும், இன்னொன்று இத்தாலியின் துரின் நகரில் இருக்கும் தொல்லியல் அருங்காட்சியகத்தில் (Museum of Antiquity, Turin) இருந்தும் பெறப்பட்டன. துரின் அருங்காட்சியகத்தில் இருக்கும் சீசரின் சிலை இத்தாலியின் Tusculum என்னும் ஊரில் 1825ஆம் ஆண்டு தோண்டி எடுக்கப்பட்டது.
லைடனில் இருந்த சிலையில் மூக்கு, உதடுகள் மற்றும் கண்ணங்கள் சேதமடைந்து இருந்தன. அதனால் துரின் அருங்காட்சியக சிலையும் பயன்படுத்தப்பட்டது. அதோடு, பழங்கால ரோமானிய காசில் இருந்த சீசரின் உருவத்தையும் பயன்படுத்தி துல்லியமாக சீசரின் முப்பரிமாண சிலையை உருவாக்கி இருக்கின்றனர். முதலில் பளிங்கு சிலைகளை முப்பரிமாணத்தில் ஸ்கேன் செய்தனர். பின்னர், களிமண்ணையும் சிலிக்கோன் ரப்பரையும் வைத்து முப்பரிமாண மாதிரியை உருவாக்கினர்.
இந்த முப்பரிமாண மறுகட்டமைப்பின் மூலம் சீசரின் தலை பெரியதாகவும், தலையின் பின் புறம் வீங்கி இருந்ததும் தெரியவந்திருக்கிறது. சிரமமான மகப்பேறோடு (delivery) சீசர் பிறந்திருக்கலாம் என்றும், அதன் காரணமாக அவருடைய தலை வீங்கி இருந்திருக்கலாம் என்றும் மருத்துவர் ஒருவர் விளக்கியதாக Buijtendorp கூறியுள்ளார். சீசரின் வேறுபாட்டான தலையின் வடிவதத்தைப் பற்றி எதிர்காலத்தில் ஆராய்ச்சியாளர்கள் மேலும் ஆராய்வார்கள் என்று நினைக்கின்றேன்.
ஜூலியஸ் சீசர் கிமு 100ஆம் ஆண்டில் பிறந்து, கிமு 44ஆம் ஆண்டில் கொல்லப்பட்டார். இந்த முப்பரிமாண மறுகட்டமைப்பு தொழில்நுட்பத்தை வைத்து வரலாற்றில் முக்கியமான பல மனிதர்களின் மாதிரியை உயிரோட்டமாக உருவாக்கலாம். கற்காலம், வெண்கலக் காலம், இரும்புக் காலம் மற்றும் ரோம பேரரசுக் காலங்களை சேர்ந்த மனிதர்களின் முப்பரிமாண மாதிரிகளை உயிரோட்டம் உள்ளவையாக உருவாக்கி வருகிறார் d’Hollosy. அவருடைய இணையத் தளத்தில் கிமு 5500ஆம் ஆண்டிற்கு முந்திய மனித எலும்புக் கூட்டை வைத்து உயிரோட்டமான முப்பரிமாண மாதிரியை உருவாக்கி இருப்பதை பார்க்க முடிகிறது.
பழங்கால மனிதர்களின் முப்பரிமாண மறுகட்டமைப்பு மாதிரிகளை கல்வி மற்றும் ஆராய்ச்சிகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். அதோடு, அவற்றை அருங்காட்சியக காட்சிப் பொருளாகவும், கலைப் பொருள் சேகரிப்பிற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். சீசரின் முப்பரிமாண மறுகட்டமைப்பின் மாதிரி இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை லைடன் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும்.
Comments
Post a Comment