- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
உலகில் பலருக்கும் நோக்கியா தான் முதல் கைப்பேசியாக இருக்கும். இப்போதும் பல வளரும் நாடுகளில் பெரியவர்கள் நோக்கியா கைப்பேசிகளைத் தான் பயன்படுத்துகிறார்கள். இது தான் நோக்கியாவின் வெற்றி. நோக்கியா நிறுவனம் நீண்ட வரலாற்றை கொண்டது. நோக்கியா 1865ஆம் ஆண்டு பின்லாந்தின் சுரங்க பொறியாளர் மற்றும் வியாபாரியான Fredrik Idestam என்பவரால் மரப்பட்டை ஆலையாக (pulb mill) தொடங்கப்பட்டது. பின்,1871 ஆம் ஆண்டு Idestam தன் நண்பரான Leo Mechelin என்பவரோடு சேர்ந்து இரண்டாவது மரப்பட்டை ஆலையை தொடங்கினார். அப்போது நிறுவனத்திற்கு நோக்கியா என்று பெயர் சூட்டினார்கள்.
(நோக்கியா போன்களின் வளர்ச்சி)
அப்போது இருந்து நோக்கிய பல்வேறு தொழில்களில் ஈடுபட்டது. ரப்பர்,மின்சார கம்பிகள்,நெட்வொர்க்கிங்,ரேடியோ, ராணுவ கருவிகள்,தொலைபேசி பரிமாற்றம் (telephone exchange), இயந்திரவியல், தொலைக்காட்சி பெட்டிகள் மற்றும் கணிப்பொறி தொழில்களை செய்து வந்தது நோக்கியா. பின்னர் Mobira என்னும் கைப்பேசி நிறுவனத்தை வாங்கிய நோக்கியா 1982ல் Mobira Senator என்னும் கார்களில் பயன்படுத்தும் தொலைபேசியை வெளியிட்டது. அது தான் நோக்கியாவின் முதல் தொலைபேசி. 1987ல் நோக்கியா Mobira Cityman 900என்னும் தொடக்க கால கையடக்க கைப்பேசியை வெளியிட்டது.
நோக்கியா போன்களின் வெற்றிக்கு முக்கிய காரணங்கள் அதன் தரமும் அதிக காலம் உழைக்கக்கூடிய தன்மையும் ஆகும். அதன் பேட்டரிகளின் நீண்ட காலம் உழைக்கும் தன்மை இன்னொரு காரணமாகும். என்ன இருந்தாலும் 1990களின் கைப்பேசிகளில் இணைய பயன்பாடோ, கிராபிக்ஸ் அதிகமாக இருக்கும் விளையாட்டுகளோ இல்லை. பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட நோக்கியா கைப்பேசிகள் கூட உறுதியாக இருக்கும்.நோக்கியா கைப்பேசிகளைப் பற்றி வியக்க வைக்கும் இன்னொரு பொருள் அதன் வடிவமைப்புகளாகும்.
1985ஆம் ஆண்டு முதல், பொதுவாக விற்பதற்கு என்று ஒரு வடிவமைப்பை நோக்கியா வைத்திருக்கும். அது தான் திரையும் விசைப்பலகையும் கொண்ட செவ்வக வடிவ போன்களாகும் (நோக்கியா 1100). இன்றும் அடிப்படை போன்களுக்கு அதே வடிவத்தை தான் பயன்படுத்துகிறார்கள். இவ்வகை கைப்பேசிகளைத் தவிர, நோக்கியா பல வடிவங்களில் புதுமையான பல கைப்பேசிகளை உருவாக்கி இருக்கிறது. அப்படிப்பட்ட நவநாகரீக கைப்பேசிகள் தான் நோக்கியாவின் வரலாற்றை தனித்துவமாக்குகின்றன.
நோக்கியாவின் புதுமையான கைப்பேசிகளில் சில எதிர்காலத்தை சார்ந்ததைப் போன்றும் (9110i Communicator), பகட்டான மடக்கு வடிவத்திலும் (8887, 2650), விசித்திரமாகவும் (7600), நவநாகரீகமாகவும் (3650, 6260, N92) மற்றும் விசித்திரமும் நாகரீகமும் கலந்தும் (7280, 6810) இருக்கும். இதன் மூலம் நோக்கியாவின் கைப்பேசிகள் எப்படி பன்முக வடிவமைப்புகளோடு இருந்தன என்பதை தெரிந்துகொள்ளலாம். அந்தக் காலத்தில் கைப்பேசிகள் பல வடிவமைப்புகளில் கிடைக்கும். இந்தக் காலத்தில் நாம் ஒரே வடிவ கைப்பேசிகளையே பயன்படுத்துகின்றோம்.
நோக்கியா காலத்தில், நம் ரசனைக்கு ஏற்ப பல வடிவ கைப்பேசிகளை வாங்கிக் கொள்ளலாம். எல்லோருக்கும் விசித்திரமான கைப்பேசிகள் பிடிக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால் இளைஞர்கள்,வித்தியாசமான ரசனை உள்ளவர்கள் அத்தகைய போன்களை விரும்புவார்கள். பன்முக வடிவமைப்புடைய கைப்பேசிகளைக் கொண்டு பத்தோடு ஒன்றாக இல்லாமல் உங்களின் தனித்துவத்தை நீங்கள் வெளிப்படுத்தலாம்.
அதே காலக் கட்டத்தில் மோட்டோரோலா நிறுவனம் ஒல்லியான Razr மடக்கு கைப்பேசியை வெளியிட்டது. அது நவநாகரீகமாகவும் வெற்றிக்கரமான கைப்பேசியாகவும் இருந்தது. சோனி எரிக்சன் கூட பல வெற்றிக்கரமான மடக்கு கைப்பேசிகளை வெளியிட்டது. நோக்கியா மட்டுமில்லாமல் பல நிறுவனங்கள் அந்தக் காலத்தில் பல வடிவில் கைப்பேசிகளை வெளியிட்டன. சான்றாக, சோனி எரிக்சனின் P910 கைப்பேசி திரையில் எழுத பயன்படும் எழுது கருவியோடு (stylus) வெளிவந்தது. அழகு, கட்டுறுதி, பகட்டு மற்றும் எதிர்காலத் தன்மை கலந்த கைப்பேசியாக P910 இருந்தது. அது தொழில்நுட்ப ஆர்வலர்களுக்கும் ஜேம்ஸ் பாண்டிற்கும் ஏற்ற கைப்பேசி போன்று இருந்தது.
ஆப்பிள் நிறுவனம் ஐபோனை வெளியிட்டு கைப்பேசியின் வரலாற்றையே மாற்றியது. ஐபோனின் வடிவமைப்பு அனைவரும் எளிதாக பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருந்தது. மடக்கு கைப்பேசிகளைப் போல் திறக்கவோ, விசைப்பலகையை மேலோ கீழோ நகர்த்தாமல் நேரடியாக பயன்படுத்தும் வகையில் இருந்தது ஐபோன். ஐபோன் வருகைக்குப் பிறகு எல்லாம் கைப்பேசி நிறுவனங்களும் அதே பாணியில் கைப்பேசிகளை உருவாக்கத் தொடங்கினார்கள். அதனால் நோக்கியா காலத்தில் இருந்தது போல் விதவிதமாக கைப்பேசிகள் உருவாக்கப்படுவது முற்றிலுமாக நின்று போயிருக்கிறது. ஐபோன் வருகைக்கு பிறகும் நோக்கியா N95 மற்றும் N71 போன்ற தனித்துவமான கைப்பேசிகளை வெளியிட்டது. நோக்கியா N95 நோக்கியாவின் ஐபோனாக இருந்தது. அதில் மிகச் சிறந்த கேமரா, இணைய இணைப்புகள் மற்றும் கைப்பேசிக்கான அலுவலக செயலிகள் இருந்தன.
(நோக்கியா N95. புகைப்பட உதவி: விக்கிப்பீடியா)
ஐபோன் காலத்தில் நோக்கியா தோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணம் மெதுவாக செயல்படும் Symbian OS ஆகும். நான் ஐபோன் பயன்படுத்த தொடங்குவதற்கு முன்பு நோக்கியா N8 வரை பயன்படுத்தி இருக்கின்றேன். அதன் தொடு திரையின் திறனும், Symbian OSசும் மிகவும் மெதுவாக செயல்படும். அதே நேரத்தில் ஐபோன் உசைன் போல்ட்டை போல் வேகமாக செயல்பட்டது. நம்மில் பலருக்கு நோக்கியாவின் தோல்வி வருத்தத்தை அளித்திருக்கும். அவர்கள் Android OSசை முதலிலேயே பயன்படுத்த தொடங்கி இருந்தால் இந்நேரம் கைப்பேசி தொழிலில் பிழைத்திருப்பார்கள்.
பலர் ஐபோன்கள், மேக்புக்குகள் போன்ற கருவிகளை பயன்படுத்துகிறோம். அதன் வடிவமைப்பை பல ஆண்டுகளாக மாற்றாததால் சலிப்பை ஏற்படுத்துகின்றன. அக்கருவிகளின் வடிவை மாற்றாமல் அதன் தடிமனை மட்டும் ஒவ்வொரு ஆண்டும் குறைத்து வெளியிடுகிறார்கள். இதனால் தான் பன்முக வடிவமைப்புக் கொண்ட நோக்கியாவின் மீது ஒரு ஈர்ப்பு இருந்து கொண்டே இருக்கிறது. இனி வரும் காலங்களில் புதிய வடிவுகளில் கைப்பேசிகளை வெளியிடுவார்கள் என்று நம்புவோம்.
Comments
Post a Comment