- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
மாயா நாகரிகத்து மக்கள் 250–900 பொது ஆண்டுகளுக்கு (CE) இடையே கொக்கோ கொட்டைகள்,சாக்லேட் பானங்கள் மற்றும் பருத்தி துணிகளை பணமாக பயன்படுத்தியதாக Bard Early College Network, USA கல்லூரியை சேர்ந்தமானுடவியலாளரும் வரலாற்றாளருமான ஜோஆன் பி. பேரன் என்பவர் கண்டுபிடித்திருக்கிறார். இடை அமெரிக்கப் பண்பாட்டு பகுதிகளில் (Mesoamerica) 1900 – 1500 பொதுக் காலத்திற்கு (BCE) முன் கொக்கோ சாகுபடி தொடங்கியது. நொதிக்க வைத்த கொக்கோ பழங்களில் இருந்து சாக்லேட் மது பானத்தை மக்கள் தொடக்கத்தில் உருவாக்கினார்கள். பின்னர், நொதிக்க வைத்த கொக்கோ பழங்களில் இருந்து கொட்டைகளை பிரித்து எடுத்து, காய வைத்து, வருத்து, அரைத்து, தண்ணீருடன் கலந்து மது அல்லாத சாக்லேட் பானத்தை தயாரிக்க தொடங்கினார்கள்.
![]() |
(சாக்லேட் பானம். புகைப்பட உதவி: Pixabay) |
மாயா நாகரிகத்தில் கொக்கோ கொட்டைகளும், நெய்த பருத்தி துணிகளும் சமுதாய மதிப்பை காட்டும் பொருட்களாக கருதப்பட்டது. அப்பொருட்களை உயர்தட்டு மாயா மக்கள் பயன்படுத்தினர். நுரையுடன் கூடிய சாக்லேட் பானத்தை திருமணம் போன்ற சிறப்பு விழாக்களுக்கும், கடவுள்களுக்கு படையளாக வைக்கவும் பயன்படுத்தினார்கள். சுருங்கிய கொக்கோ கொட்டைகளை விட புதிதான பெரிய கொட்டைகளின் மதிப்பு கூடுதலாக இருந்தது. பொதுவாகசிவப்பு நிற கொக்கோ கொட்டைகளை விடபழுப்பு நிற கொக்கோ கொட்டைகள் சுவையாகவும் நறுமணமாகவும் இருக்கும். சிவந்த கொக்கோ கொட்டைகள் முழுமையாக நொதிக்கப்படாமல் இருக்கும். அதனால் பழுப்பு நிற கொக்கோ கொட்டைகளுக்கு மதிப்பு கூடுதலாக இருக்கும். மாயா மக்கள் சின்ன கொக்கோ கொட்டைகளை சாக்லேட் செய்வதற்கும்,பெரிய கொட்டைகளை பணமாகவும் பயன்படுத்தினார்கள்.
![]() |
(மரத்தில் கொக்கோ, கொக்கோ கொட்டைகள் (விக்கிப்பீடியா) மற்றும் வறுத்த கொக்கோ கொட்டைகள் (Pixabay) |
நெய்யப்பட்ட பருத்தி துணிகளை ஆண்களும் பெண்களும் உடைகளாக பயன்படுத்தினார்கள். சித்திர வேலைபாடு (embroidery, எம்பிராய்டரி), ஓவியம் மற்றும் அச்சு ஒப்பனை மிக்க பருத்தி துணிகள் சமுதாய மதிப்பு மிக்கதாக போற்றப்பட்டன. பருத்தியின் மிருதுவான தன்மையும் துணிகளின் மதிப்பை கூட்டின. அவற்றை உயர்தட்டு மக்கள் மட்டுமே பயன்படுத்தினர். யானைக் கற்றாழை (Maguey) தாவரத்தின் நார்களில் இருந்து செய்யப்படும் ஆடைகளுக்கு மதிப்பு குறைவாக இருந்தது. அவற்றை சாதாரண மக்கள் பயன்படுத்தினர்.
ஏழாம் நூற்றாண்டில் வரையப்பட்ட சுவர் சித்திரங்களில் மக்கள் நுரையுள்ள சாக்லேட் பானத்தை கொடுத்து tamale மாவை வாங்கும் காட்சியை பேரன் கண்டுபிடித்திருக்கிறார். அந்த சுவர் சித்திரங்களை Calakmul என்னும் தொல்பொருள் ஆராய்ச்சி தளத்தில் கண்டுபிடித்திருக்கிறார்கள். அவை ஒரு அங்காடி வளாகத்தின் நடுவில் இருக்கும் பிரமிடுக்குள் இருந்தன. சோள தானியங்கள், சோளத்தில் செய்யப்படும் பானமான atole, சோள மாவில் செய்யப்படும் உணவான tamales, tamale மாவு, புகையிலை, உப்பு, களிமண் குடுவை, பாய்கள், கிளி போன்ற பொருட்களை மக்கள் வாங்குவது, விற்பது மற்றும் பண்டமாக மாற்றிக் கொள்வது போன்ற காட்சிகள் அந்த சுவர் சித்திரங்களில் பதியப்பட்டு இருக்கின்றன. வேறு மூன்று காட்சிகளில் வெவ்வேறு அளவிலும் வண்ணங்களிலும் நெய்யப்பட்ட பருத்தி துணிகள் விற்பனைக்காக வைத்திருப்பது பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன.
![]() |
(ஒருவர் சாக்லேட்டை தொடுவதை தடுக்கும் மாயா தலைவர் - விக்கிப்பீடியா) |
ஏழாம் நூற்றாண்டு இறுதியில் இருந்து எட்டாம் நூற்றாண்டு இறுதி வரையிலான காலக் கட்டத்தில் செய்யப்பட்ட மட்பாண்ட பாத்திரங்கள் மற்றும் செதுக்கப்பட்ட நினைவுச் சின்னங்களில் ஆட்சியாளர்களுக்கு துணிகளை பரிசளிப்பது போன்ற காட்சிகள் வரையப்பட்டிருக்கின்றன. 1519ஆம் ஆண்டில் ஸ்பெயின் மெசோ-அமெரிக்க நாடுகளை ஆக்கிரமித்த போது கூட கொக்கோவும் பருத்தி துணியும் அங்காடிகளில் பொருட்களை வாங்கவும் விற்கவும், சூதாட்டத்திற்கும், தொழிலாளர்களுக்கு சம்பளமாகவும் பயன்படுத்தப்பட்டன. அசுடெக் நாகரிக மக்களும் கொக்கோ கொட்டைகளையும் துணிகளையும் சம்பளமாக போர் வீரர்கள், ஆளுநர்கள், கைவினை கலைஞர்கள் மற்றும் வணிகர்களுக்கு கொடுத்ததாக பேரன் குறிப்பிட்டு இருக்கிறார். எடுத்துக்காட்டாக டெக்சுகோக்கோ (Texcoco) ஆட்சியாளருக்கு 1.1 கோடி கொக்கோ கொட்டைகள் ஒவ்வொரு ஆண்டும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
Comments
Post a Comment