- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
தினமும் லட்சக்கணக்கான மக்கள் விமானங்களில் பயணம் செய்கிறார்கள். விமானங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள நமக்கு எப்போதும் ஆர்வமாக இருக்கும். விமானங்களைப் பற்றிய சுவையான தகவல்கள் சிலவற்றை இங்கு பார்ப்போம். இந்த தகவல்கள் பெரும்பாலும் யூட்யூப்பின் பிரபல சேனலான கேப்டன் ஜோவில் இருந்து எடுக்கப்பட்டது. விமானியான கேப்டன் ஜோ தான்அந்த சேனலை நடத்திக் கொண்டு இருக்கிறார்.
![]() |
(ஏர்பஸ் A380 விமானம்) |
1. விமான ஓடுபாதைகளுக்கு அருகே குழாய் வடிவ பலூன் பறப்பதை பார்த்திருப்பீர்கள். அதன் பெயர் windsock. அது காற்றின் திசையையும், வேகத்தையும் சுட்டிக் காட்டும். அவற்றில் ஐந்து வளையங்கள் இருக்கும் ( 3 சிவப்பு & 2 வெள்ளை). ஒவ்வொரு வளையமும் 5 நாட் (Knot) காற்றின் வேகத்தை குறிக்கும். விமானிகள் காற்றின் திசையையும், வேகத்தையும் கணக்கிட அவை உதவியாக இருக்கும். அதை வைத்து விமானிகள் விமானத்தின் சுக்கானையும் (rudder) சரி செய்து கொள்வார்கள்.
2. கார்களில் இருப்பதைப் போல்,விமானங்களிலும் முன் சாளரங்களில் விழும் மழை நீரைத் துடைக்க வைப்பர்கள் (wipers) இருக்கும்.
3. விமான சாளரங்களில் இருக்கும் சிறு துளை எல்லாம் பயணிகளின் ஆர்வத்தையும் ஈர்க்கும். அந்த துளையை ஆங்கிலத்தில் bleed hole என்று அழைக்கிறார்கள். விமான சாளரங்கள் மூன்று அடுக்குகளாக இருக்கும். அந்த துளை நடு அடுக்கில் இருக்கும். அது விமானத்திற்கு உள்ளேயும், வெளி சாளர அடுக்கிற்கும் இடையே உள்ள காற்று அழுத்தத்தை சமன் படுத்த உதவும். சாளரத்தில் பனி உருவாகுவதையும் அந்த துளை தடுக்கும்.
4. பறக்கும் விமானங்களில் மினுக்கும் விளக்குகளை நாம் கவனித்திருப்போம். விமானங்களில் 8 வகையான விளக்குகள் இருக்கும். அவை பல்வேறு தேவைகளுக்காக பயன்படும். மினுக்கும் விளக்குகள் இறக்கைகளின் முனையிலும், விமான உடற்பகுதியின் (fuselage) இறுதியிலும் இருக்கும். இந்த விளக்குகள் ஒவ்வொரு நொடிக்கும் மினுக்கி விமானம் பறப்பதை அல்லது ஓடுபாதையில் வரிசையில் நிற்பதை குறிக்கும்.
5. விமானங்களின் எரிபொருள் தொட்டிகள் இரண்டு இறக்கைகளிலும்,இரண்டு இறக்கைகளுக்கு நடுவே இருக்கும் பகுதியிலும் இருக்கும்.
6. விமானங்கள் மேகங்களுக்குள் பறக்கும் போது எதிர்மின்னிகள் (electrons) விமானங்களின் விளிம்புகளில் குவிந்துவிடும். அது நிலை மின்சாரத்தை (static electricity) உருவாக்கும். அந்த நிலை மின்சாரம் விமானத்தின் ரேடியோ தகவல் தொடர்பை பாதிக்கும். அதோடு விமானிகள் பயன்படுத்தும் காதொலிப்பான்களில் (headphones) இறைச்சலை உண்டுபண்ணும். மேலும் காந்த புலத்தை உருவாக்கி வழிசெலுத்தும் அலைக்கம்பங்களையும் (navigation antennas) பாதிக்கும். அவ்வாறு குவியும் எதிர்மின்னிகளை வெளியேற்றுவதற்காக விமானங்களில் static dischargers (static wicks) இருக்கும். ஊசி அல்லது ஆண்டென்னா (அலைக்கம்பம்) வடிவில் இருக்கும் இவை விமானங்களின் இறக்கைகள், சுக்கான்கள் போன்ற விளிம்புகளில் பொருத்தப்பட்டு இருக்கும். இவை நிலை மின்சாரத்தை நீக்கி, ரேடியோ தகவல் தொடர்பு பாதிப்புகளில் இருந்து விமானங்களை பாதுக்காக்கும்.
7. ஏர்பஸ் நிறுவனம் விமானங்களின் வெவ்வேறு பாகங்களை தனித்தனியாக ஜெர்மனி, ஐக்கிய இராச்சியம், ஸ்பெயின் மற்றும் பிரான்சில் தயாரிக்கின்றது. தயாரித்த பாகங்களை பிரான்சின் துலூஸ் (Toulouse) மற்றும் ஜெர்மனியின் ஆம்பர்கு (Hamburg) நகர்களில் இருக்கும் தங்கள் தொழிற்சாலைகளுக்கு கொண்டு வந்து பொருத்துகிறார்கள். இத்தகைய பொருத்தும் தொழிற்சாலைகளை புதிதாக சீனாவிலும் அமெரிக்காவிலும் ஏர்பஸ் நிறுவனம் தொடங்கி இருக்கின்றது.
8. புதிதாக தயாரிக்கப்பட்ட விமான உடற்பகுதிகள் மற்றும் இறக்கைகளை ‘ஏர்பஸ் பெலுகா’ விமானங்கள் மூலம் பொருத்தும் தொழிற்சாலைகளுக்கு கொண்டு செல்கிறார்கள்.‘ஏர்பஸ் பெலுகா’திமிங்கலம் வடிவில் இருக்கும் மிகப்பெரிய சரக்கு விமானமாகும்.
![]() |
(ஏர்பஸ் பெலுகா விமானம் - விக்கிப்பீடியா) |
9. விமானிகள் விமானத்தை இயக்கும் அறையான காக்பிட்டில் (cockpit) ஆறு சாளரங்கள் இருக்கும். ஒவ்வொரு சாளரத்திலும் மூன்று அடுக்குகள் ஒன்று சேர்ந்த கண்ணாடி இருக்கும். மின்சாரத்தின் உதவியுடன் இந்த கண்ணாடிகளுக்கு சூடு ஏற்றுகிறார்கள். அதனால் கண்ணாடிகளில் பனி படர்வதும், பனிக்கட்டி உருவாகுவதும் தவிர்க்கப்படுகிறது.
10.இடர் காலங்களில் (emergency) விமானம் தரை இறங்கியவுடன்,விமானிகளால் காக்பிட் கதவு வழியே வெளியேற முடியாவிட்டால், காக்பிட்டின் பக்கவாட்டு சாளரங்களுக்கு மேல் ஒரு கயிறு கட்டப்பட்டு இருக்கும்; விமானிகள் அந்தக் கயிற்றை பிடித்த படி சாளரங்கள் வழியே வெளியே இறங்கிவிடலாம்.
11.விமானிகளுக்கு முன்னே இருக்கும் இரண்டு சாளரங்களுக்கு நடுவே அலைக்கம்பம் போல் ஒரு குச்சி இருக்கும். அதன் பெயர் External Visual Ice Indicator. அது பனிக்கட்டி உருவாகுவதையும், மழைத் துளிகளையும் கண்காணிக்கும். இறக்கைகள் மற்றும் விசைப்பொறிகளில் (engine) பனிக்கட்டி உருவானால் அது விமானிகளுக்கு தெரிவித்துவிடும்.
12.இறக்கைகள் மற்றும் விசைபொறிகளின் முன் பகுதிகளில் பனிக்கட்டி உருவானால், விசைப்பொறிகளில் இருந்து வரும் வெப்பக் காற்றை அந்தப் பகுதிகளுக்கு அனுப்பி பனிக்கட்டியை உருக்கிவிடுவார்கள்.
13.Turboprob வகை விமானங்களில் பனிக்கட்டிகளை உடைக்க புத்திசாலித் தனமான அமைப்பை பயன்படுத்துகிறார்கள். அந்த விமான இறக்கைகளின் விளிம்பை ரப்பரை வைத்து பூசியிருப்பார்கள். இறக்கைகளில் பனிக்கட்டி உருவானவுடன், விசைப்பொறிகளின் வெப்பக் காற்றை ரப்பர் பகுதிக்கு அனுப்புவார்கள். வெப்பக் காற்று ரப்பர் பகுதியை பலூன்களைப் போல் விரிவடைய செய்து,பனிக்கட்டியை உடைத்துவிடும்.
14.சில விமானங்களில் கிளைக்கோலை வைத்து உருவாக்கப்படும் நீர்மங்களை (glycol-based fluids) பயன்படுத்தி பனிக்கட்டிகளை உருக்குகிறார்கள்.
15.ஒவ்வொரு விமானியும் ஆண்டிற்கு இரண்டு அல்லது மூன்று மின்னல் தாக்குதல்களை சந்திப்பதாக கேப்டன் ஜோ கூறுகிறார்.
16.விமானிகள் போலரைசுடு (polarized) கண்ணாடிகள் அணிவதை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். காக்பிட்டில் பல LCD திரைகள் இருக்கும். அவற்றில் ஓரளவு போலரைசுடு வடிகட்டிகள் (filters) இருக்கும். அந்த LCD திரைகளில் இருந்து கிடைமட்ட வாக்கில் (horizontal) போலரைசுடு ஒளி வெளியாகும். விமானிகள் அணிந்திருக்கும் போலரைசுடு கண்ணாடிகளிலும் கிடைமட்ட வடிகட்டிகள் இருந்தால், விமானிகளால் நேரடியாக மட்டுமே LCD திரைகளை பார்க்க முடியும். விமானிகள் தலையை சாய்த்தால் காண்ணாடியில் இருக்கும் கிடைமட்ட வடிகட்டி, செங்குத்து (vertical) நிலையாகிவிடும். அப்போது LCD திரைகளில் இருந்து வரும் ஒளி மறைந்துவிடுவதோடு, LCD திரையில் காணப்படும் எழுத்துகளையும் படிக்க முடியாது.
17.காக்பிட் சாளரங்களும் ஓரளவு போலரைசுடு செய்யப்பட்டு இருக்கும். விமானிகள் போலரைசுடு கண்ணாடிகள் அணிந்திருந்தால்,சாளரங்களில் எண்ணெய் திட்டுகள் இருப்பது போல் தெரியும். பார்வையும் குறைவடையும்.
18.விமானங்கள் மேலே கிளம்பும் போதும், கீழே இறங்கும் போதும் விமான பணியாளர்கள் தட்டுகளை மேலே மாட்டி வைக்குமாறும், இருக்கைகளை நேரே வைக்குமாறும் பயணிகளை கேட்டுக் கொள்வார்கள். இடர் காலங்களில் பயணிகள் எளிதாக இருக்கைகளில் இருந்து வெளியேறுவதற்காகத் தான் இவ்வாறு அறிவுறுத்துகிறார்கள்.
19.இரவு நேரங்களில் விமானங்கள் கிளம்பும் போதும் அல்லது இறங்கும் போதும், விமானத்திற்குள் இருக்கும் விளக்குகளின் ஒளியை விமான பணியாளர்கள் குறைத்து விடுவார்கள். விமானத்தின் வெளியில் இருக்கும் இருளான சூழலுக்கு பயணிகளின் பார்வைத்தன்மை சமமாக இருப்பதற்காக இது செய்யப்படுகிறது. விமானத்திற்குள் வெளிச்சம் மிகுதியாக இருந்து, இடர் நேரத்தில் பயணிகள் வெளியேற வேண்டி இருந்தால், வெளியில் இருக்கும் இருளான நிலைக்கு கண் பார்வையை சரி செய்துக் கொள்ள சில நேரமாகும். அதை தவிர்ப்பதற்காகத் தான் விமானத்திற்குள் வெளிச்சத்தை குறைத்து விடுகிறார்கள்.
20.உணவு நஞ்சாதலால் (food poisoning) ஏற்படும் பாதிப்பை தவிர்ப்பதற்காக விமானியும், துணை விமானியும் வெவ்வேறு உணவுகளை உட்கொள்வார்கள்.
Comments
Post a Comment