- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
விமானத்திற்குள் எடுத்துச் செல்லும் பெட்டிகள்,பைகளை ஆய்வு செய்ய புதிய முப்பரிமாண CT வருடியை (CT scanner) அமெரிக்காவின் விமான நிலைய பாதுகாப்பு அமைப்பான டிஎஸ்ஏ (TSA, Transportation Security Adminstration) பயன்படுத்த தொடங்கி இருக்கிறது. முதற்கட்டமாக நியு யார்க்கின் ஜேஎப்கே (JFK) விமான நிலையத்திலும்,பீனிக்ஸ் மற்றும் பாஸ்டன் விமான நிலையங்களிலும் இந்த வருடியை பயன்படுத்த தொடங்கி இருக்கிறார்கள். உலகின் அனைத்து விமான நிலையங்களிலும் இது வரை எக்ஸ் கதிர் (X-ray) வருடிகளைத் தான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
![]() |
| (விமான நிலையங்களில் பயன்பாட்டிற்கு வரப்போகும் 3D வருடி. புகைப்பட உதவி: Analogic) |
எக்ஸ் கதிர் வருடிகள்,பெட்டிகளின் இருபரிமாண (2D) படத்தை கொடுக்கும். அதன் மூலம் பெட்டிகள்,பைகளுக்குள் இருக்கும் எல்லாம் பொருட்களையும் பார்க்க முடியாது. அதனால் தான்,பயணிகளின் பைகளில் இருந்து மடிக்கணினிகள் மற்றும் கைக் கணினிகளை (tablet) வெளியே எடுத்து, ஆய்வு செய்வதற்காக தனி தட்டுகளில் வைக்க விமான நிலைய பாதுகாப்பு பணியாளர்கள் அறிவுறுத்துகிறார்கள். ஏனெனில், மடிக்கணிகள் அதன் கீழ் இருக்கும் கத்தி போன்ற சிறு பொருட்களை வருடிகளிடம் இருந்து மறைத்துவிடும்.
Computer Tomography எனப்படும் CT வருடிகள் பெட்டிகளுக்குள் இருக்கும் பொருட்களை படம் பிடித்து, முப்பரிமாண படத்தைக் கொடுக்கும். அதனால், பெட்டிகளுக்குள் இருக்கும் ஒவ்வொரு பொருளையும் பாதுகாப்பு பணியாளர்களால் துள்ளியமாக பார்க்க முடியும். அதோடு, முப்பரிமாண படத்தை 360 கோணங்களில் சுற்றிப் பார்த்து ஆய்வு செய்ய முடியும். இதனால், பயணிகள் தங்கள் பைகள், பெட்டிகளில் இருந்து மடிக்கணினி,பிற மின்சாதன பொருட்கள் மற்றும் திரவ புட்டிகளை ஆய்விற்காக வெளியே எடுக்கத் தேவை இல்லை. விமான நிலையங்களில் CT வருடிகளை பயன்படுத்துவதால் பாதுகாப்பு ஆய்விற்காக அதிக நேரத்தை செலவிடுவது குறையும். அது மட்டும் இல்லாமல், விமான நிலையங்களில் வழக்கமாக நடக்கும் தீவிர ஆய்வுகளால் ஏற்படும் கசப்பான பட்டறிவும் குறைய வாய்ப்பு இருக்கின்றது.
முப்பரிமாண CT வருடிகள் பெரும் அளவில் மருத்துவத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த வருடிகள் மனித மற்றும் விலங்குகளின் எலும்புகள் மற்றும் உள்ளுறுப்புகளை படம்பிடித்து காட்ட உதவுகின்றன. CTவருடிகளும் எக்ஸ் கதிரைத் தான் பயன்படுத்துகின்றன. ஆனால் வழக்கமான எக்ஸ் கதிர் வருடி போல் இல்லாமல், இவை உடலைச் சுற்றி படம்பிடித்து, எலும்புகள் மற்றும் உள்ளுறுப்புகளின் முப்பரிமாண படத்தை கொடுக்கும். அதனால் உள்ளுறுப்புகளை எல்லாம் கோணங்களிலும் பார்க்க முடியும். கூடுதலாக, CTவருடிகள் உடல் மற்றும் உள்ளுறுப்புகளின் குறுக்குவெட்டுத் தோற்றத்தையும் கொடுக்கும். இத்தகைய முப்பரிமாண CT வருடியினால், பயணிகளின் பெட்டிகளில் இருக்கும் சிறிய பொருட்களைக் கூட விமான நிலைய பாதுகாப்பு பணியாளர்களால் ஆய்வு செய்ய முடியும். இவ்வாறு துள்ளியமாக ஆய்வு செய்வதால், விமானத்தில் கொண்டுச் செல்ல தடை விதிக்கப்பட்ட பொருட்கள் பெட்டிகளுக்குள் இருந்தால் எளிதாக கண்டுபிடித்து, அகற்றிவிட முடியும்.
இந்த ஆண்டின் இறுதிக்குள் பதினைந்து அமெரிக்க விமான நிலையங்கள் இந்த CT வருடிகளை பயன்படுத்தப் போவதாக அமெரிக்காவின் CBSசெய்தி தொலைக்காட்சி கூறுகிறது. 2019ஆம் ஆண்டில் டிஎஸ்ஏ 240 CT வருடிகளை வாங்கப் போகிறது. அமெரிக்காவில் இருக்கும் அனைத்து விமான நிலைய சோதனைச் சாவடிகளுக்கும் மொத்தம் இரண்டாயிரம் CT வருடிகள் தேவைப்படும். உலகின் பிற விமான நிலையங்களும் படிப்படியாக இந்த வருடிகளை பயன்படுத்த தொடங்கும்.
CT வருடி எப்படி வேலை செய்கிறது என்பதை அறிய இந்த வீடியோவை பார்க்கவும்
- Get link
- X
- Other Apps

Comments
Post a Comment