- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
François Truffaut ஒரு பிரபல பிரெஞ்ச் இயக்குனர், திரைப்பட விமர்சகர் மற்றும் ஆல்பிரட் ஹிட்ச்காக் படங்களின் ஆர்வலர். 1962ஆம் ஆண்டு தன் தோழர் ஹெலன் ஸ்காட் உதவியுடன் ஹிட்ச்காக்கிடம் பேட்டி எடுத்தார். அந்தப் பேட்டியை 1967ஆம் ஆண்டு நூலாக வெளியிட்டார்கள்.
அந்த நூலை நான் அண்மையில் படித்தேன். அந்நூல் மிகவும் சுவாரசியமாகவும் ஹிட்ச்காக்கின் படங்களைப் பற்றிய பல தகவல்கள் நிரம்பியதாகவும் இருந்தது. ஹிட்ச்காக்கின் ரசிகர்களும் திரைப்படத் துறையினரும் இந்த நூலை மிகவும் விரும்புவர். நூலின் தொடக்கத்தில் ஹிட்ச்காக்கின் படங்கள் ஏன் சிறந்ததாக இருக்கிறது என்றும் ஹிட்ச்காக் ஏன் ஒரு முழுமையான இயக்குனராக திகழ்கிறார் என்றும் விளக்குகிறார் Truffaut. ஹிட்ச்காக்கிடம் தன் கேள்விகளின் மூலம் அவரின் படங்களைப் பற்றிய பல தகவல்களை பேசவைத்திருக்கிறார் Truffaut.அதுதான் இந்நூலில் முதன்மையாக கவரும் அம்சமாகும்.
நூலின் முதல் அத்தியாயத்தில் தனது குழந்தைப் பருவம், தான் எப்படி சினிமாத் துறைக்குள் நுழைந்தார் மற்றும் தனது படமான The Pleasure Gardenயை எடுத்தப்போது ஏற்பட்ட சாகச அனுபவங்களை விளக்கியிருக்கிறார் ஹிட்ச்காக். அதற்கு அடுத்ததாக ஹிட்ச்காக் எடுத்த ஒவ்வொரு படத்தைப் பற்றியும் பேசியிருக்கிறார்கள். இந்த பேட்டி எடுத்த காலத்தில் ஹிட்ச்காக் The Birds படத்தை எடிட் செய்துகொண்டிருந்தார். ஹிட்ச்காக்கின் கடைசி படங்களான Topaz, Frenzy மற்றும் Family Plotபற்றிய செய்திகளை தனி ஒரு அத்தியாயத்தில் கொடுத்திருக்கிறார் Truffaut.ஹிட்ச்காக்கின் கடைசி காலத்தில் கூட அவருடன் தொடர்பில் இருந்திருக்கிறார் Truffaut.அதனால் அவருடைய கடைசிப் படங்களைப் பற்றிய செய்திகளை நேரடியாகவே சேகரித்திருக்கிறார் Truffaut.
இந்நூலில் ஒவ்வொரு படத்தையும் எப்படி தொடங்கினார், எங்கிருந்து கதைகளைப் பெற்றார், படத் தயாரிப்பாளர்கள் எப்படியெல்லாம் உதவினார்கள் அல்லது எப்படியெல்லாம் நடிகர்களின் தேர்வில் குறிக்கிட்டார்கள் மற்றும் படப்பிடிப்பு தளங்களைப் பற்றி அருமையாக விளக்கியுள்ளார் ஹிட்ச்காக். குறிப்பாக நடிகர்களைப் பற்றியும் படம் எடுக்கும் தொழில்நுட்பங்களைப் பற்றியும் பேசியிருக்கிறார்.
தன் படங்களை தானே விமர்சிக்கும் ஹிட்ச்காக்கின் பாணி இந்நூலை மேலும் சிறப்பிக்கிறது. தனது சில படங்கள் ஏன் சரியாக வசூல் செய்யவில்லை, தவறான நடிகர்களின் தேர்வு எப்படி படங்களின் தரத்தை குறைத்தது மற்றும் எப்படி எடுத்திருந்தால் சில படங்கள் நன்றாக வந்திருக்கும் என்பதை ஹிட்ச்காக்கே விளக்குகிறார். இத்தகைய வியக்க வைக்கும் தகவல்கள் ரசிகர்களுக்கு சுவாரசியமாகவும் திரைப்படத் துறையினருக்கு பாடமாகவும் இருக்கும்.
அடுத்து சுவாரசியத்தை கூட்டும் விசயம் என்னவென்றால் ஹிட்ச்காக் தான் திரைப்படங்களில் பயன்படுத்திய நுட்பங்களை விளக்கும் பகுதிகள். குறிப்பாக The Lodger படத்தில் வரும் கண்ணாடி தரைக் காட்சி, Suspicionபடத்தில் கண்ணாடி டம்ளரில் இருக்கும் பாலை ஒளிர வைத்த நுட்பம், Spellboundபடத்தில் வரும் பிரபல கனவுக் காட்சி என்று சிலவற்றை சொல்லலாம். அந்தக் கனவுக் காட்சியை வடிவமைத்தவர் பிரபல கலைஞர் Salvador Dali. திரைப்படங்களில் ஒலி நட்பம் அறிமுகமான பிறகு அவற்றை எப்படியெல்லாம் தன் படங்களில் பயன்படுத்தினார் என்பதை விளக்கியுள்ளார் ஹிட்ச்காக்.
ஹிட்ச்காக்கின் மிக பிரபலமான படங்களை மட்டுமாவது நீங்கள் பார்த்திருந்தால் இந்நூலில் இவர்கள் இருவரும் விவாதித்திருப்பதை எளிதாக புரிந்து கொள்ளலாம். தவிர ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் படங்களின் கதையை சுருக்கமாக கொடுத்திருக்கிறார் Truffaut.
நூலின் முடிவில் ஹிட்ச்காக்கின் கடைசி படங்கள் ஏன் முந்தைய படங்களைப் போல் சிறப்பாக இல்லை என்பதைப் பற்றி அருமையாக Truffaut விளக்கி இருக்கிறார். ஹிட்ச்காக் ரசிகர்கள் படிக்க வேண்டிய நல்ல நூல் இது.
இந்தப் பேட்டியை அடிப்படையாக கொண்டு இயக்குனர் Kent Jones 2015ல் ஒரு ஆவணப்படத்தை எடுத்திருக்கிறார். அதில் இயக்குனர்கள் James Gray, Martin Scorsese, Paul Schrader, Wes Anderson, David Fincher, Arnaud Desplechin மற்றும் Olivier Assays ஆகியோர் ஹிட்ச்காக்கைப் பற்றி பேசியிருக்கிறார்கள். அந்த ஆவணப்படத்தின் டிரைலரை கீழே பார்க்கவும்.
Comments
Post a Comment