- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
சீனாவின் வீனஸ் ஆப்டிக்ஸ் நிறுவனம் புதுமை மற்றும் விசித்திரமான மேக்ரோ லென்ஸ் ஒன்றை அறிமுகப்படுத்தி இருக்கிறது. அதன் பெயர் Laowa 24mm f/14 Macro Probe. வழக்கமான மேக்ரோ லென்ஸ்களை போல் இல்லாமல், இது ஒடுக்கமாக, 40.8 செ.மி நீளத்தில், குழல் வடிவில் இருக்கின்றது. அதனாலேயே இந்த லென்ஸ் பார்ப்பதற்கு மாறுபட்டதாகவும், புதுமையாகவும் இருக்கிறது. பொருட்களை வெறும் 2 செ.மி தூரத்தில் இருந்து படம் பிடிக்க இந்த லென்ஸ் உதவும்.
![]() |
(Laowa மேக்ரோ லென்ஸ்) |
மேலும், பொருட்களை 2:1 அளவிற்கு பெரிதுபடுத்தி படம் எடுக்க திறன் படைத்தது இந்த லென்ஸ். இது 84.1° டிகிரி அகன்ற கோணத்தில் படம் பிடிக்கும். அதனால் சிறு பூச்சிகளின் பார்வை (bug’s eye) போல் படம் பிடிப்பதோடு, பின்புலத்தையும் தெளிவாக படம் பிடிக்கும். வழக்கமான மேக்ரோ லென்ஸ்களால் இதன் அளவிற்கு பின்புலத்தை தெளிவாக படம் பிடிக்க முடியாது. இந்த லென்சை வைத்து சிறிய பூச்சிகள் மற்றும் ஸ்டூடியோக்களில் சிறிய பொருட்களை படம் பிடிக்க முடியும்.
![]() |
(Laowa மேக்ரோ லென்ஸ்) |
இந்த 40.8 செ.மி நீண்ட குழல் வடிவ லென்சை வைத்து புகைப்படக் கலைஞர்கள் காட்டு வாழ்வை, அதன் இயற்கை வாழ்விடமான எறும்பு புற்று, எலி வளை போன்ற இடங்களில் பாதுகாப்பான தூரத்தில் இருந்து படம் பிடிக்க முடியும். வன விலங்குகளைப் பற்றிய ஆவணப் படங்கள், அறிவியல் ஆராய்ச்சி வீடியோக்கள் மற்றும் புதுமையான பொழுபோக்கு வீடியோக்களை இந்த மேக்ரோ சென்சை வைத்து அருமையாக எடுக்கலாம். இந்த லென்ஸ் குழலின் விட்டம் 2 செ.மி. தான். அதனால், இந்த லென்சை புற்கள், செடிகள் போன்ற குறுகிய இடங்களுக்குள் எளிதாக நகர்த்தி படம் பிடிக்கலாம்.
Laowa மேக்ரோ லென்சின் துவாரம் (aperture) f/14 அளவுடையது. இந்த அளவு துவாரத்தின் மூலம் அதிக வெளிச்சம் இருக்கும் இடங்களில் தான் படம் பிடிக்க முடியும். ஆனால்,பாராட்டத்தக்க வகையில் இந்த லென்சின் முனையில் வளையம் போன்ற LED விளக்கை வடிவமைத்து இருக்கிறார்கள். ஒளி குறைந்த இடங்களில் புகைப்படமோ வீடியோவோ எடுக்க இந்த LED விளக்கு மிகவும் உதவும். கூடுதலாக, இந்த லென்சின் குழலை தண்ணீராலோ, தூசிகளாலோ பாதிக்கப்படாதவாறு உருவாக்கி இருக்கிறார்கள். அதனால் இந்த லென்சை தண்ணீரிலோ, குடி பானங்களிலோ அமிழ்த்தி படம் பிடிக்கலாம்.
இத்தகைய சிறப்புகள் மிக்க லென்சின் விலை $1,149. கெனான், நிக்கான், சோனி மற்றும் ஆர்ரி கேமராக்களுக்கு ஏற்ற வகையில் இந்த லென்ஸ்கள் தனித்தனியாக தயாரிக்கப்படும். மொத்தமாக இந்த லென்சை தயாரிப்பதற்காக Kickstarterரின் கூட்டு நிதி திரட்டலுக்கு (crowdfunding) விண்ணப்பித்து இருக்கிறது வீனஸ் ஆப்டிக்ஸ் நிறுவனம். இந்த மேக்ரோ லென்ஸ் புதுமையாக இருப்பதாலும், பல புகைப்பட ஆர்வலர்கள் வாங்க விரும்புவார்கள் என்பதாலும் வீனஸ் ஆப்டிக்ஸிற்கு தேவையான நிதி கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. இப்போதே பல இணையத் தளங்களில் இந்த மேக்ரோ லென்சைப் பற்றிய தங்களின் ஆர்வத்தை புகைப்படக் கலைஞர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.
இந்த லென்ஸ் மூலம் எடுக்கப்பட்ட, மேற்கொண்டு சுவையார்வமிக்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இந்த Kickstarter பக்கத்தில் பார்த்து மகிழலாம்.
Comments
Post a Comment