- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
ஹண்ட்ஸ்வில்லில் இருக்கும் அலபாமா பல்கலைகழகத்தின் துணை பேராசிரியர் சாங்-க்வான் கேங் இயந்திர தேனீக் கூட்டத்தை வைத்து செவ்வாய் கிரகத்தை ஆராயும் ஒரு திட்டத்தை முன்மொழிந்துள்ளார். அந்த இயந்திர தேனீக்களுக்கு Marsbees என்று பெயர் சூட்டி உள்ளார். இவருடைய திட்டத்தையும் சேர்த்து 25 புதுமையான திட்டங்களுக்கு நாசாவின் 2018 ஆம் ஆண்டிற்கான ‘NASA Innovative Advanced Concepts (NIAC) விருது கிடைத்திருக்கிறது. இவருடைய திட்டத்தில் ஒரு தானியங்கி வண்டியும் (ரோவர்) இயந்திர தேனீக்களும் இருக்கும். தானியங்கி வண்டி ஒரு நகரும் தளமாகவும் மின்சார கருவிகளுக்கு ரீஜார்ஜ் செய்யும் நிலையமாகவும் முதன்மை தகவல் தொடர்பு மையமாகவும் செயல்படும். இந்த இயந்திர தேனீக்கள் பம்பிள்பீ (bumblebee) வண்டின் அளவில் இருக்கும். இவற்றிற்கு சிக்காடா (cicada) பூச்சிகளுக்கு இருப்பதைப் போன்ற இறகுகள் பொருத்தப்படும்.
(நாசாவின் இயந்திர தேனீக்கள் - விளக்கப்படம் - C. Kang/NASA)
இந்த இயந்திர தேனீக்கள் ஒரு குழுவாக செயல்படும். இயந்திர தேனீக்களுக்கு தகவல்களை சேகரிக்க உணரிகளும் (sensors) தானியங்கி வண்டியை தொடர்பு கொள்ளத் தேவையான கம்பியில்லா தகவல் தொடர்பு கருவிகளும் இருக்கும். இவை செவ்வாய் கிரகத்தின் வெப்பம், வளிமண்டல அழுத்தம் மற்றும் இராசாயன கலப்பு போன்ற தகவல்களை சேகரிக்கும் திறன் உடையதாக இருக்கும். இந்த இயந்திர தேனீக்கள் சிறந்த காற்றியக்கவியல் (aerodynamics) தன்மை கொண்டதாக வடிவமைக்கப்படும். அதனால் இயந்திர தேனீக்கள் செவ்வாய் கிரகத்தின் சூழ்நிலைக்கு ஏற்ப நன்றாக பறக்க முடியும். இயந்திர தேனீக்கள் குறைந்த மின்சாரத்தில் செயல்படும் தன்மையோடு உருவாக்கப்படும்.
அலபாமா பல்கலைகழகமும், ஆராய்ச்சியாளர் கேங்கின் சக ஜப்பானிய ஆராய்ச்சியாளர்களும் சேர்ந்து கூட்டாக இயந்திர தேனீக்களை வடிவமைத்து உருவாக்குவார்கள். NIAC விருதின் மூலம் இந்த திட்டத்திற்கு $125,000 பண உதவி கிடைத்திருக்கிறது. நடைமுறையில் பயன்படுத்தக் கூடிய அளவிற்கு இயந்திர தேனீக்களின் மாதிரிகளை உருவாக்கினால், நாசா அடுத்தக்கட்ட விருதுகளை இவர்களுக்கு அளிக்கும்.
(நாசாவின் க்யுரியாசிட்டி விண்கலம் - நாசா)
செவ்வாய் கிரகத்திற்கு இயந்திர தேனீக்களை அனுப்புவது நல்ல திட்டமாகும். ஏனெனில் இயந்திர வண்டிகள் போக முடியாத செவ்வாய் கிரகத்தின் கடினமான மற்றும் ஆபத்தான மேற்பரப்புகளுக்கு இயந்திர தேனீக்களால் எளிதாக பறந்து செல்ல முடியும். இது வரை நாசா சோஜர்னர், ஸ்பிரிட், ஆப்பர்சுனிட்டி மற்றும் க்யுரியாசிட்டி என்னும் நான்கு தானியங்கி வண்டிகளை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பி இருக்கிறது. ஆப்பர்சுனிட்டி வண்டி செவ்வாய் கிரகத்தில் 45 கிலோ மீட்டர் பயணம் செய்திருக்கிறது. நிலா மற்றும் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப பட்ட இயந்திர வண்டிகளில் அதிக தூரம் பயணம் செய்து சாதனை செய்திருக்கிறது ஆப்பர்சுனிட்டி.
(க்யுரியாசிட்டியின் பாதிப்படைந்த சக்கரம் - NASA/JPL/Caltech/MSSS)
சில மாதங்களுக்கு முன்பு செவ்வாய் கிரகத்தின் கடினமான பாறைகளால் க்யுரியாசிட்டியின் அலுமினிய சக்கரங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. சக்கரங்களுக்கு அதிகம் பாதிப்பு ஏற்பட்டால் இவ்வகை வண்டிகளால் நகர்ந்து சென்று ஆராய்ச்சி செய்ய முடியாது. ஆனால் இந்த மாதிரியான சிக்கல்கள் இயந்திர தேனீக்களுக்கு இருக்காது. இயந்திர தேனீக்கள் கடினமான பாறைகள் இருக்கும் மேற்பரப்பின் மீது பறந்து சென்று தகவல்களை சேகரிப்பதோடு இயந்திர வண்டிகளை கடிமான பாறைகளிடமிருந்து பாதுகாக்கும். இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப் பட்டால் செவ்வாய் கிரகத்தின் சுற்றுச் சூழலை ஆராயவும் புரிந்து கொள்ளவும் உதவியாக இருக்கும்.
Comments
Post a Comment