விவசாயம் உருவாகுவதற்கு முன்பே ரொட்டி தயாரித்த மனிதர்கள்

பழங்கால மனிதர்கள் ஜோர்டானில் 14,400 ஆண்டுகளுக்கு முன்பு ரொட்டி தயாரித்ததை கோபன்ஹேகன் பல்கலைகழகம்லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி மற்றும் கேம்பிரிட்ச் பல்கலைகழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். இது மனிதர்கள் விவசாயம் செய்யத் தொடங்கிய காலத்திற்கு 4,000 ஆண்டுகள் முற்பட்ட காலம் ஆகும். இதற்கு முன்பு செய்யப்பட்ட ஆராய்ச்சிகளின் மூலம், விவசாயம் தொடங்கப்பட்ட பிறகும், தாவரங்களை கொல்லைப்படுத்த (domestication) தொடங்கப்பட்ட பிறகு தான் மனிதர்கள் ரொட்டி தயாரிக்க தொடங்கினார்கள் என்று கருதப்பட்டுவந்தது. ஆனால், விவசாயத்திற்கு முன்பே மனிதர்கள் ரொட்டி சுட்டார்கள் என்று இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருப்பது வியக்க வைக்கிறது. 

இதற்கு முன்புஐரோப்பா மற்றும் தென்மேற்கு ஆசிய பகுதிகளில் இருக்கும் புதிய கற்கால (Neolithic) தொல்பொருள் ஆராய்ச்சிஇடங்களில் ரொட்டி இருந்ததற்கான சான்றுகள் கிடைத்தது. அது 9100 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று கணக்கிடப்பட்டது. 

ரொட்டி
(ரொட்டி. புகைப்பட உதவி: Pixabay)

வேட்டையாடி வாழ்ந்தநாடோடிமனிதர்கள், Natufian (12,500 9,500 கிமு) காலத்தில் வடகிழக்கு ஜோர்டானில் வாழ்ந்தார்கள். அதற்கான சான்றுகளை Shubayqa 1 என்னும் இடத்தில் 1990களில் Allison Bets என்பவர் கண்டுபிடித்தார். இப்போது,அந்த இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட 24 கருகிய உணவு மிச்சப் பொருட்களை ஆராய்ந்து இருக்கிறார்கள் விஞ்ஞானிகள். Shubayqa 1 இடத்தில் இரண்டு பழங்கால கட்டிடங்கள் இருக்கின்றன. அந்தக் கட்டிடங்களில் செதுக்கப்பட்ட கற்கள் (chipped stones), அரைக்க உதவும் கற்கள், மனித எலும்புகள் மற்றும் தாவரத்தின் மிச்ச பொருட்கள் போன்றவற்றை இதற்கு முன்பு நடத்தப்பட்ட ஆராய்ச்சிகளில் தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்தார்கள். இப்போது நடத்தப்பட்ட ஆராய்ச்சியில், அங்கு நெருப்பு மூட்ட பயன்படுத்தப்பட்ட இரண்டு இடங்களை ஆராய்ந்து இருக்கிறார்கள். அங்கு இருந்து 65,000க்கும் மேற்பட்ட மரக்கட்டை அல்லாத தாவர மிச்சங்களை கண்டெடுத்துள்ளார்கள். கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பு (radiocarbon dating) மூலம் அந்த நெருப்பு மூட்டும் இடங்களில் இருந்து எடுக்கப்பட்ட கருகிய தாவர மிச்சங்களின் காலம் 14,400 - 14,200 ஆண்டுகள் பழமையானது என்று கணக்கிட்டு இருக்கிறார்கள். 

விஞ்ஞானிகள்அலகிடு எதிர்மின்னி நுண்ணோக்கியை (Scanning electron microscope) பயன்படுத்தி 24 தாவர மிச்சங்களை பரிசோதனை செய்தார்கள்.  தொல்பொருள் ஆராய்ச்சி தளங்களில் ரொட்டிகள்மாவுகள் மற்றும் கஞ்சி போன்ற பொருட்கள் இருப்பதை கண்டுபிடிப்பதற்கு பொதுவாக தானியங்களின் திசுக்களை ஆராய்வார்கள். 24 தாவிர மிச்சங்களில் 15ல் தானியங்களின் திசுக்கள்பழத்தோலின் திசுக்கள்விதைகளுக்கு உள்ளே இருக்கும் (endosperm cell) அணுக்களின் கட்டமைப்புக்கள் மற்றும் மாப்பொருள் (starch) இருந்த அணுக்கள் போன்றவை இருந்தை கண்டுபிடித்திருக்கிறார்கள். நெருப்பு மூட்டும் இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட காட்டு வகையை சேர்ந்த கோதுமை மற்றும் வாற்கோதுமையின் (பார்லி)  விளிம்புகள் வீங்கி இருந்ததை கண்டுபிடித்திருக்கிறார்கள். இது தானியங்கள் கருகுவதற்கு முன்பு அரைக்கப்பட்டிருப்பதை சுட்டிக் காட்டுகிறது. இதற்கு முன்பு அங்கு கண்டெடுக்கப்பட்ட அரைப்பதற்கு பயன்படுத்தப்படும் கற்களை பயன்படுத்தி ஆதி மனிதர்கள் தானியங்களை அரைத்து இருக்கலாம். 

நமது (மனித) வரலாற்றைப் பற்றி படிப்பது எப்போதும் சுவையார்வமாக இருக்கும். விவசாயம் தொடங்குவதற்கு முன்பே மனிதர்கள் ரொட்டி சுட்டார்கள் என்ற கண்டுபிடிப்பு மிகவும் வியக்க வைக்கின்றது. ஆதி மனிதர்கள் பயணத்திற்காகவும், சிறப்பு உணவாகவும் ரொட்டியை தயாரித்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். 

Comments