கம்பளி யானைகள் பூமியில் வாழ்ந்த போது

பல ஆயிரக்கணக்கான உயிரினங்கள் பூமியில் அழிந்திருக்கின்றன. அவற்றில் சில விலங்குகள் மட்டுமே நமது ஆர்வத்தை ஈர்க்கின்றன. அப்படிபட்ட விலங்குகளில் கம்பீரமான கம்பளி யானையும் ஒன்று. கம்பளி யானைகள் கிழக்கு ஆசியாவில் நான்கு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஸ்டெப்பே கம்பளி யானை இனத்தில் இருந்து பரிணாமித்து வந்தவை. கம்பளி யானைகள் ஆசியா, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா ஆகிவற்றின் வடக்கு பகுதிகளில் வாழ்ந்து வந்தன. தற்கால ஆசிய யானைகளும் கம்பளி யானைகளும் மரபணு ரீதியாக மிகவும் நெருங்கிய உறவு உடையவை. கம்பளி யானைகள் தற்கால ஆப்பிரிக்க யானைகளின் அளவும் எடையும் உடையாதாக இருந்தன. 

கம்பளி யானைகள்
(கம்பளி யானைகள் - விக்கிப்பீடியா)

கம்பளி யானைகள் பனி யுகத்தில் வாழ்ந்தவை. அதனால் அவற்றின் உடல் முழுவதிலும் உரோமங்கள் இருந்தன. அவற்றிற்கு நீண்டு வளைந்த தந்தங்கள் இருந்தன. தற்கால யானைகளைப் போன்றே அவற்றின் வாழ்க்கை முறையும் இருந்தது. கம்பளி யானைகளின் உறைந்த உடல்கள் சைபீரியாவிலும் அலாஸ்காவிலும் கண்டெடுக்கப்பட்டது. அவற்றின் உடல்கள் பனியில் உறைந்து அதிகம் சிதையாமல் இருந்ததால், விஞ்ஞானிகளால் அவற்றைப் பற்றி செம்மையாக ஆராய முடிந்தது.

பூமியில் பெரிய விலங்குகள் அழியத் தொடங்கிய காலத்தை ஆங்கிலத்தில் Quaternary Extinction Event என்று அழைக்கிறார்கள். அந்த காலகட்டத்தில் தான் கம்பளி யானைகளும் அழியத் தொடங்கின. சுமார் 14,000 – 10,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்த இடைப்பட்ட காலங்களில் பெரும்பாலான கம்பளி யானை இனங்கள் அழிந்துவிட்டன. சில இனங்கள் சைபீரியாவின் Kyttyk தீபகற்பத்தில் 9,650 ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும்அலாஸ்காவின்St. Paul தீவில் 5,600 ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் வாழ்ந்து வந்தன. கம்பளி யானைகளின் கடைசி இனம் ஆர்க்டிக் பெருங்கடலில் ரஷ்யாவிற்கு அருகே இருக்கும் Wrangel தீவில் 4,000 ஆண்டுகளுக்கு முன்பு வரை வாழ்ந்து வந்தன. மனிதர்களின் நடவடிக்கைகள் அதிகரித்ததும்கால நிலை மாற்றமும் கம்பளி யானைகளின் அழிவிற்கு காரணமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். 

கம்பளி யானை
(கம்பளி யானையை வேட்டையாடும் மனிதர்கள் - விக்கிப்பீடியா)

நியண்டர்தால்களும் கம்பளி யானைகளும் நடு பழைய கற்காலத்தில்’ (Middle Paleolithic; 300,000-30,000 ஆண்டுகளுக்கு முன்பு) ஒரே இடங்களில் வாழ்ந்து வந்தார்கள். நியண்டர்தால்கள் கம்பளி யானைகளை வேட்டையாடி உண்டார்கள்புதிய மனிதர்களும் (Homo sapiens) கம்பளி யானைகளும் உயர் பழைய கற்காலத்தில்’ (Upper Paleolithic; 50,000 – 10,000 ஆண்டுகளுக்கு முன்பு) ஒரே இடங்களில் வாழ்ந்து வந்தார்கள். 45,000 ஆண்டுகளுக்கு முன்பு ஆர்க்டிக் பகுதிகளில் குடியிருந்த மனிதர்கள் கம்பளி யானைகளை வேட்டையாடி வாழ்ந்தார்கள்

கம்பளி யானை குடிசை
(கம்பளி யானை எலும்புகளை கொண்டு உருவாக்கப்பட்ட குடிசையின் மாதிரி - விக்கிப்பீடியா)

நியண்டர்தால்களும் புதிய மனிதர்களும் கம்பளி யானைகளின் எலும்புகள் மற்றும் தோல்களை வைத்து குடிசைகள் அமைத்து வாழ்ந்தனர். அப்படிப்பட்ட கம்பளி யானை எலும்பு குடிசை ஒன்று உக்ரைன் நாட்டின் Mezhyrich என்னும் கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. 


அதுமட்டும் இல்லாமல் கம்பளி யானைகளின் எலும்புகளை வைத்து கருவிகள்தளபாடங்கள் (furniture) மற்றும் இசைக் கருவிகளையும் செய்து வந்தனர். 30,000 - 37,000 ஆண்டுகளுக்கு முன்பு கம்பளி யானையின் எலும்பை வைத்து செய்யப்பட்ட புல்லாங்குழல் ஒன்று ஜெர்மனியில் கண்டுபிடிக்கப்பட்டது. குதிரைகள் எருமைகளைப் போல கம்பளி யானைகளும் குகை ஓவியங்கள் வரைவதற்கு பிரபல கரு பொருளாக இருந்தன. பிரான்ஸ்ஸ்பெயின் மற்றும் ரஷ்யாவில் இருக்கும் குகைகளில் கம்பளி யானைகளின் பல ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில ஓவியங்கள் 35,000 – 11,500 ஆண்டுகளுக்கு முன்பு வரையப்பட்டவை. 

கம்பளி யானை குகை ஓவியம்
(குகை ஓவியத்தில் கம்பளி யானை - விக்கிப்பீடியா)

கீழ்வரும் வரலாற்று நிகழ்வுகள் கம்பளி யானைகள் பூமியில் உயிரோடு இருந்த போது நடந்தவை:

1.  மனிதர்கள் கிரேக்கத்தின் கிரீட் (Crete) தீவியில் 130,000 ஆண்டுகளுக்கு முன்பும் ஆஸ்திரேலியாவில் 40,000 ஆண்டுகளுக்கு முன்பும் குடியேறினார்கள். அந்த இடங்களுக்கு செல்ல மனிதர்கள் படகுகளை பயன்படுத்தி இருக்கலாம். பழமையான படகு (தோணி) ஒன்று நெதர்லாந்தின் Pesse என்னும் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்டது. அது பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்டிருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

2.  கிமு 7500 ஆண்டுகளில் செய்யப்பட்ட களி மண் செங்கல்கள் டமாஸ்கஸ் நகருக்கு அருகே இருக்கும் Tell Aswad, டைகிரிசு ஆற்றுப் பகுதிகள் மற்றும் துருக்கியின் அனத்தோலியா பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டன. 

3.    சீனாவில் 9,400 ஆண்டுகளுக்கு முன்பே அரிசி சாகுபடி செய்ததற்கான சான்றுகள் Shangshan என்னும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. 

4.  கிமு 3500 ஆண்டுகளில் செய்யப்பட்ட எளிதாக சுழலும் சக்கரம் ஒன்று மெசொப்பொதாமியாவில் கண்டுபிடிக்கப்பட்டது. அது பானைகள் செய்ய பயன்படும் சக்கரமாகும். அதற்கு முந்நூறு ஆண்டுகளுக்கு பின்பு தான் மனிதர்கள் வண்டிகளுக்கு சக்கரங்களை பயன்படுத்த தொடங்கினர். 

5.    சீனாவில் கிமு 7000களிலேயே நொதிக்கவைத்த மது பானங்கள் இருந்ததாக கருதப்படுகிறது. இருந்தாலும் பீர் மற்றும் ஒயின் இருந்ததற்கான பழமையான சான்று (கிமு 3500 – 3100) ஈரானில் உள்ள Godin Tepe என்னும் தொல்பொருள் ஆய்வு தளத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

6.    எகிப்தின் முதல் அரச தலைமுறை (dynasty) கிமு 3100களில் உருவாக்கப்பட்டது. 

7.    எகிப்தில் இருக்கும் கிசாவின் பெரிய பிரமீடு கிமு 2580 – 2560 ஆண்டுகளுக்கு இடையே கட்டப்பட்டது. அதே நேரத்தில் கம்பளி யானைகளின் கடைசி இனம் Wrangel தீவில் வாழ்ந்து வந்தன.

நமக்கு கம்பிளி யானைகளின் மீது இருக்கும் ஈர்ப்பு வரலாற்றின் முந்தைய காலத்தோடு முடிந்து விடவில்லை. பல விஞ்ஞானிகள் பனியில் உறைந்து இருந்த கம்பளி யானைகளின் மரபணுக்களை எடுத்து,க்ளோனிங் மூலம் அவற்றை மீண்டும் உயிர்ப்பிக்க விரும்புகிறார்கள்.


Comments