- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
அனைத்துலக விண்வெளி நிலையத்தில் (International Space Station, ISS) இருக்கும் ஐரோப்பிய விண்வெளி கழகத்தின் (ESA) விண்வெளி வீரர் ஒருவருக்கு உதவ பறக்கும் இயந்திரம் (ரோபோ) CIMONயை (Crew Interactive Mobile Comapnion, சைமன்) ஏர்பஸ் மற்றும் ஐ.பி.எம். நிறுவனங்கள் இணைந்து உருவாக்கி இருக்கின்றன. சைமனை பந்து வடிவில், 32 செ.மி. விட்டமும், ஐந்து கிலோ எடையுடனும் உருவாக்கி இருக்கிறார்கள். முப்பரிமாண அச்சாக்க (3D printing) தொழில்நுட்பம் மூலம் இதை ஏர்பஸ் உருவாக்கி இருக்கிறது. பிளாஸ்டிக் மற்றும் உலோகங்களை வைத்து இந்த பறக்கும் ரோபோவை கட்டமைத்து இருக்கிறார்கள். இதற்கு எட்டு இஞ்ச் திரையும் இருக்கிறது.
![]() |
| (CIMON பறக்கும் இயந்திரம். புகைப்பட உதவி: ஏர்பஸ்) |
சைமன் செயற்கை அறிவுத்திறன் (artificial intelligence, AI) மூலம் இயக்கும். இது Watson AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அறிவை பெற்றுக்கொள்ளும். ஏர்பஸ், ஜெர்மனியின் விண்வெளி கழகமான DLR (Deutsches Zentrum für Luft), ஐ.பி.எம் மற்றும் Ludwig-Maximilians-University Munich (LMU) பல்கலைகழகத்தை சேர்ந்த ஐம்பது பேர்கள் ஒன்றிணைந்து சைமனை உருவாக்கி இருக்கிறார்கள்.
SpaceX சேவையின் மூலம் சைமன் ISS விண்வெளி நிலையத்திற்கு ஏற்கனவே அனுப்ப பட்டுள்ளது. விண்வெளியில் முதல் முறையாக செயல்படும் செயற்கை அறிவுத்திறன் கொண்ட ரோபோ இது தான். குறிப்பாக ஜெர்மானிய விண்வெளி வீரரான அலக்ஸ்சாண்டர் கெர்ஸ்ட்டுடன் (Alexander Gerst) இணைந்து செயல்படுமாறு சைமனுக்கு பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது. சைமன், கெர்ஸ்டின் முகத்தையும் பேச்சையும் அடையாளம் கண்டுகொண்டு, சிக்கலான ஆய்வுகளில் அவருக்கு உதவும். மற்ற விண்வெளி வீரர்களுடனும் இதனால் தொடர்பு கொள்ள முடியும். விண்வெளி வீரர்களின் மனநிலையை அறிந்து கொண்டு, அதற்கு ஏற்றார் போல் அவர்களை தொடர்பு கொள்ளுக்கூடியது சைமன். இதற்கு உணர்வுசார் நுண்ணறிவும் (emotional intelligence) உண்டு.
சைமனின் கேமராக்களும் சுழற்விசிறிகளும் (propellers) அது விண்வெளி நிலையத்திற்குள் பறக்க உதவிபுரியும். கெர்ஸ்ட்டின் படிக (crystals) ஆய்விற்கும், மருத்துவ ஆராய்ச்சிக்கும் சைமன் உதவிபுரியும். அதோடு Rubik’s cube புதிரை கண்டுபிடிக்கவும் உதவும். சைமனின் தகவல் தொடர்பு முழுவதும் மேகக் கணிமை (cloud computing) தொழில்நுட்பம் மூலம் சேமித்து வைக்கப்படும். அதன் செயற்கை அறிவுத்திறன் சார்ந்த வேலைகள் கூட மேகக் கணிமை முறையிலேயே செயல்படுத்தப்படும். இதனால் பூமியில் இருந்தே சைமனின் செயல் திறனை அதிகப்படுத்த முடியும்.
விண்வெளி வீரர்களால் சைமனின் எட்டு இஞ்ச் திரையில் ஆராய்ச்சிக்கு தேவையான செயல்முறைகள், வீடியோக்கள், அன்றாடம் செய்ய வேண்டிய வேலைகளின் பட்டியல்கள் போன்ற தகவல்களை பார்த்துக்கொள்ள முடியும். தொழில்நுட்பக் கோளாறு எதுவும் ஏற்பட்டால் அதை முன்கூட்டியே விண்வெளி வீரர்களுக்கு தெரியப்படுத்தும் எச்சரிக்கை அமைப்பும் சைமனில் இருக்கிறது.
கெர்ஸ்ட் சைமனை இந்த ஆண்டு (2018) ஆக்டோபர் மாதம் வரை விண்வெளி நிலையத்தில் பயன்படுத்துவார். இதைப் போன்ற பறக்கும் இயந்திர உதவியாளர்கள் எதிர்காலத்தில் மருத்துவனைகள் மற்றும் சமூக பாதுகாப்பு நிலையங்களில் பயன்படுத்தப் படலாம் என்று ஏர்பஸ் நிறுவனம் கருதுகிறது. நிலா மற்றும் செவ்வாய் கிரகங்களில் கூட இந்த பறக்கும் இயந்திரங்களை பயன்படுத்தலாம் என்று நினைக்கின்றேன். இதைப் போலவே, இந்த ஆண்டு ஏப்ரலில், செவ்வாய் கிரகத்தை ஆராய உதவும் இயந்திர தேனீக்கள் (Marsbees) திட்டத்திற்கு நாசா நிதி உதவி அளித்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Comments
Post a Comment