- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
தொல்லியல் ஆய்வுகள் அடிக்கடி வரலாற்றிற்கு முன்பு நடந்த நிகழ்வுகளின் காலத்தை மேம்படுத்திக் கொண்டே இருக்கும். வரலாறு பற்றிய நமது அறிவையும் அவை ஆழப்படுத்திக் கொண்டே இருக்கும். ஆஸ்திரேலியாவில் 65,000 ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் குடியேறியதாக முந்தைய ஆய்வுகள் கூறுகின்றன. தற்போதைய ஆய்வு 47,000 ஆண்டுகளுக்கு முன்பு வட கடற்கரை பகுதியில் இருந்து மேற்கு ஆஸ்திரேலியாவுக்கு மனிதர்கள் இடம்பெயர்ந்து இருக்கலாம் என்று விளக்குகிறது. ஆஸ்திரேலியாவின் மேற்கு பாலைவன பகுதியில் இருக்கும் கர்னாடுகுல் (Karnatukul or Serpent’s Glen) என்னும் இடத்தில் எடுக்கப்பட்ட கல் கருவிகளில் இதனை உறுதி செய்கின்றன. இதற்கு முன்பு செய்யப்பட்ட ஆராய்ச்சி 26,000 ஆண்டுகளுக்கு முன்பு தான் மனிதர்கள் ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் குடியேறியதாக கூறியது. இந்த புதிய ஆய்வை மேற்கொண்டவர்கள் மேற்கு ஆஸ்திரேலியப் பல்கலைகழகத்து (University of Western Australia) விஞ்ஞானிகள். இவர்கள் கர்னாடுகுலில் இருந்த பாறைகளாலான பழங்கால தங்கும் இடத்தில் இருந்து 25,000க்கும் மேற்பட்ட தொல்பொருட்களை தோண்டி எடுத்தார்கள். அந்த தொல்பொருட்களில் கற்கள்,கல் கருவிகள்,நிறமிகளை (pigments) வைத்து வரையப்பட்ட ஓவியங்கள் மற்றும் நிறமி துண்டுகள் ஆகியவை அடங்கும். மனித உருவங்கள், பாம்புகள், ஆமைகள் மற்றும் தாவரங்களை நிறமிகளை வைத்து ஆதி மனிதர்கள் ஓவியங்களாக வரைந்து இருப்பதையும் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.
![]() |
(ஆஸ்திரேலியாவின் வரைபடம் - விக்கிப்பீடியா) |
கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பு (radiocarbon dating) முறை மூலம் தொல்பொருட்களின் காலத்தை விஞ்ஞானிகள் கணக்கிட்டு இருக்கிறார்கள். படிவுப் பாறையான (sedimentary rock) இரும்புக்கல் ஒன்று 47,860 ஆண்டுகள் பழமையாக இருந்ததை கண்டுபிடித்து இருக்கிறார்கள். இது மேற்கு ஆஸ்திரேலியாவில் குடியேறிய மனிதர்கள் 47,860 ஆண்டுகளுக்கு முன்பே அங்கே வாழ்ந்து இருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது. தொல்பொருட்கள் 50,000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானதாக இருக்கின்றதா என்று அந்த விஞ்ஞானிகளால் கணக்கிட முடியவில்லை. ஏனெனில், கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பு மூலம் 40,000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான பொருட்களை துள்ளியமாக கணக்கிட முடியாது.
கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்புக்கு பயன்படுத்தப்படும் கரிமம்-14னின் (carbon-14) அரைவாழ்வுக் காலம் 5730 ஆண்டுகள். (கதிரியக்க ஓரிட்டத்தான் (radioactive isotope) முழு அளவில் இருந்து பாதி அளவாக குறைவதை அரைவாழ்வுக் காலம் என்பார்கள்). 40,000 ஆண்டுகளில் கரிமம்-14 ஒரு சதவிகிதத்திற்கும் குறைவாக குறைந்துவிடும். அதனால், அதை கணக்கிடுவது சிரமாக இருப்பதோடு, துள்ளியமாகவும் இருக்காது. 40,000 ஆண்டுகளை விட பழமையான பொருட்களின் காலத்தை கணிக்க வேறு கதிரியக்க தனிமங்களை பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, யுரேனியம் ஈயமாக சிதையும் கதிரியக்கக் காலமதிப்பீடை பயன்படுத்தலாம். யுரேனியம்-235 தனிமத்தின் அரைவாழ்வுக் காலம் 70.38 கோடி ஆண்டுகள் ஆகும்.
(கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பை பற்றி விளக்கும் வீடியோ)
மீதம் உள்ள தொல்பொருட்களை விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ந்து கொண்டும், ஒருங்கமைத்துக் கொண்டும் இருக்கிறார்கள். அந்த தொல்பொருட்களை மேற்கு ஆஸ்திரேலியப் பல்கலைகழக தொல்பொருள் ஆராய்ச்சி கூடத்தில் பாதுகாப்பாக வைத்து இருக்கிறார்கள். ஏற்கனவே ஆராய்ந்து முடித்த தொல்பொருட்களை மேற்கு ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தில் (West Australian Museum) வைத்திருக்கிறார்கள். மிகவும் பழமையான நிறமி ஓவியம் 8,160 – 2,330 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்றும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டு இருக்கிறார்கள். தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் இந்த ஆய்வு ஆஸ்திரேலியாவில் குடியேறிய மனிதர்கள் பற்றி மேலும் பல சுவையார்வமான தகவல்களை வெளிக் கொண்டு வரும்.
தொடர்புடைய சுவையார்வமான பதிவுகள்:
Comments
Post a Comment